இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பலம்வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, தங்களின் முதல் ICC கோப்பையை தென் ஆப்ரிக்கா அணி முத்தமிட்டுள்ளது.
முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 212 ரன்னும், தென் ஆப்ரிக்கா 138 ரன்னும் எடுத்தன. இதையடுத்து 74 ரன் முன்னிலையுடன், 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பின்னர் 282 ரன் இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்க அணி, மார்க்ரமின் சதம் மற்றும் பவுமாவின் அரை சதத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றிவாகை சூடியது. கேப்டன் பவுமா 66 ரன்னில் வெளியேறினாலும், மறுமுனையில் மார்க்ரம் நங்கூரம் போல உறுதியாக நின்றார்.
136 ரன்களில் இருந்த மார்க்ரம் ஹேசல்வுட்டின் பந்துவீச்சில், ட்ராவிஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். என்றாலும் தன்னுடைய பொறுப்பான ஆட்டத்தால், தென் ஆப்ரிக்காவின் நீண்ட கால ஏக்கத்திற்கு மார்க்ரம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தென் ஆப்ரிக்காவின் இந்த வரலாற்று வெற்றியால், ICC இறுதிப்போட்டியில் இதுவரை தோற்காத மூவேந்தர் அணியாக வலம்வந்த பேட் கம்மின்ஸ், ஹேசல்வுட், ஸ்டார்க் கூட்டணியின் அதிர்ஷ்டம் முடிவுக்கு வந்துள்ளது. தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா ஆஸ்திரேலியாவின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டி, மிகப்பெரும் சம்பவத்தை செய்துள்ளார்.