தேங்காய் என்பது இந்தோ-பசிபிக் பகுதியில் அதன் தோற்றத்துடன் தொடங்குகிறது, பின்னர் கடல்வழி வணிகர்களால் உலகம் முழுவதும் பரவியது, குறிப்பாக 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து கிழக்கு ஆப்பிரிக்கா வரை, அங்கு அவர்கள் “இந்தியாவின் கொட்டை” என்று இதை அழைத்ததாக சொல்லப்படுகினறது.
ஸ்பானிஷ் மற்றும் போர்த்துகீசிய ஆய்வுப் பயணிகள்தான் இதை “தேங்காய்” என்று முதன்முதலில் பெயரிட்டனர். மேலும், 2009 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2 ஆம் தேதி உலக தேங்காய் தினம் அனுசரிக்கப்படுகிறது.
தேங்காயை சமையலுக்கு மட்டுமல்ல பல நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்துகிறோம்.மேலும்,தேங்காயில் பல்வேறு நன்மைகள் நிறைந்துள்ளன. பச்சை தேங்காய் சாப்பிடுவது சுவையாக இருக்கும். அப்படி சாப்பிட்டால் உடலில் கொழுப்பு அதிகமாகிவிடும் என்று சிலர் அதை தவிர்த்து விடுகிறார்கள். ஆனால் உண்மையில் தேங்காயை சமையல் சேர்த்து சாப்பிடுவதை விட தினமும் ஒரு துண்டு அளவு பச்சை தேங்காயை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? அதனைப்பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேங்காயில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால் இது உடலில் இருந்து அதிகப்படியான சோடியத்தை சிறுநீர் மூலம் வெளியேற்றிவிடும். மேலும் இதில் இருக்கும் சாச்சுரேட்டட் கொழுப்பானது இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க வழிவகுக்கிறது. இதனால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் என்கின்றனர்.
ஒரு துண்டு பச்சை தேங்காய் தினமும் ,சாப்பிட்டு வந்தால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். தேங்காயில் உள்ள மாங்கனீசு தாது, உடலில் கால்சியத்தை முழுமையாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது, இது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.மேலும், பச்சை தேங்காயில் மாங்கனீசு மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளதால், அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த உதவுகிறது.
மறதி பிரச்சினை உள்ளவர்கள் அதாவது, அல்சைமர், டிமென்ஷியா பிரச்சனைகளை தடுப்பதற்கு தேங்காய் பெரிதும் உதவும். தினமும் ஒரு சின்ன துண்டு பச்சை தேங்காய் சாப்பிட்டு வந்தால் அதில் இருக்கும் குணாதிசயம் இந்த பிரச்சனைகளை குறைக்க வழிவகுக்கும்.
தேங்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் அது மலச்சிக்கல் பிரச்சனையை போக்கி செரிமானத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மேலும் குடல் இயக்கத்தையும் அதிகரிக்கும்.இது மட்டுமின்றி, குடல்புண், வாய் புண்ணிற்கு தேங்காய் மிகவும் நல்லது என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.
தேங்காயில் தாமிரம் மற்றும் இரும்பு சத்து அதிகமாக உள்ளதால் அவை உடல் முழுவதும் ஆக்சிஜனை கொண்டு சென்று ரத்த சிவப்பு அணுக்களை உடலில் அதிகரிக்க செய்யும்.
குறிப்பாக பச்சை தேங்காய் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கினாலும் அதை அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை கூடும். ஆகையால் இருதய பிரச்சனைகள் உள்ளவர் அளவோடு சாப்பிடுவது நல்லது. முக்கியமாக உங்கள் உணவுமுறையில் ஏதேனும் மாற்றம் செய்ய நினைத்தல் அதனை தகுந்த மருத்துவரின் ஆலோசனையில் மாற்றம் செய்வது மிக சிறந்தது.