மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைப்பு…

தமிழ்நாட்டில் புதியதாக பொறுப்பேற்ற தவெக அரசின் நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது தவெக தலைவர் விஜய், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,500, வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4,000 உதவித்தொகை மற்றும் மகளிருக்கு இலவச பேருந்து சேவை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்திருந்தார். தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, மகளிருக்கு ரூ.2,500 வழங்கும் திட்டமே முதல் கையெழுத்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட மூன்று திட்டங்களுக்கு மட்டுமே கையெழுத்திட்டார்.

இதனால், திமுக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட நலத்திட்டங்கள் தொடருமா என்ற சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக சட்டப்பேரவையிலும் கடும் விவாதம் நடைபெற்றது. பின்னர், திமுக ஆட்சியில் செயல்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என முதலமைச்சர் விஜய் உறுதியளித்தார். அதே நேரத்தில், கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய கால அவகாசம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். ஏற்கனவே செயல்பட்டு வரும் திட்டத்தைத் தொடர ஏன் தாமதம் என அவர் கேள்வி எழுப்பினார். மேலும், தேர்தலில் ரூ.2,500 வழங்குவதாக கூறிவிட்டு, தற்போது ரூ.1,000 கூட உடனடியாக வழங்காதது ஏமாற்றமளிப்பதாக விமர்சித்தார்.

இந்நிலையில், மே மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் இன்று ரூ.1,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், தமிழ்ப் புதல்வன் மற்றும் புதுமைப் பெண் திட்டங்களின் பயனாளிகளுக்கும் ஆயிரம் ரூபாய் நேற்று வரவு வைக்கப்பட்டதால் மாணவர்கள் மற்றும் பெண்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Related News

Latest News