தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து மாதந்தோறும் வருங்கால வைப்பு நிதி (PF) தொகை செலுத்தப்படுகிறது. இந்த சேமிப்புக்கு அரசு ஆண்டுதோறும் வட்டி வழங்குகிறது.
வேலை விட்டு வெளியேறிய பிறகு பிஎஃப் கணக்கில் வட்டி தொடருமா என்பது பலருக்கும் உள்ள முக்கிய சந்தேகமாகும்.
பலர், மூன்று ஆண்டுகள் பிஎஃப் பங்களிப்பு இல்லையெனில் கணக்கு செயலற்றதாகி வட்டி நிற்கும் என்று நினைக்கின்றனர். ஆனால் தற்போதைய இபிஎஃப்ஓ (EPFO) விதிகளின்படி இது தவறான கருத்தாகும்.
ஒருவர் வேலையை விட்டாலும், பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை எடுக்காமல் வைத்திருந்தால், 58 வயது வரை அந்தத் தொகைக்கு தொடர்ந்து வட்டி கிடைக்கும். அதாவது புதிய பங்களிப்பு இல்லாவிட்டாலும், கணக்கில் இருக்கும் இருப்புத் தொகை காம்பவுண்டிங் முறையில் வளர்ந்து கொண்டே இருக்கும்.
எனினும், ஒருவர் 58 வயதை அடைந்த பிறகு அந்தக் கணக்கு செயலற்றதாக (Inoperative) கருதப்படும். அதன் பின்னர் புதிய வட்டி வழங்கப்படாது. மேலும், 55 வயதுக்கு மேல் ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வு பெற்ற நாளிலிருந்து 36 மாதங்கள் வரை மட்டுமே வட்டி கிடைக்கும்.
எனவே வேலை மாறினாலோ அல்லது சில ஆண்டுகள் வேலை செய்யாமல் இருந்தாலோ அவசரமாக பிஎஃப் தொகையை எடுக்க வேண்டிய அவசியமில்லை.
ஆதார் மற்றும் கேஒய்சி (KYC) விவரங்கள் சரியாக புதுப்பிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து, பிஎஃப் தொகையை ஓய்வுகால சேமிப்பாக வைத்திருப்பது நீண்ட கால நிதி பாதுகாப்புக்கு பயனுள்ளதாக இருக்கும்.
