உலக அரசியலில், நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்று சொல்வார்கள். அதை நூற்றுக்கு நூறு உண்மை என்று நிரூபிக்கும் வகையில் ஒரு ஆச்சரியமான சம்பவம் நடந்திருக்கிறது. இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவிகித வரி விதிப்புக்கு எதிராக, சீனா இந்தியாவுக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டித்துள்ள சீனா, “கொடுமைக்கார” அமெரிக்காவை எதிர்க்க, இந்தியாவும் சீனாவும் “குழுவாகப்” வேலை செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்கள் மீது 50 சதவிகித வரியை விதித்துள்ளார். இதில் 25 சதவிகிதம் வர்த்தக வரி, மீதமுள்ள 25 சதவிகிதம், இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அபராதம்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில்தான், டெல்லியில் உள்ள சீனத் தூதர் சூ ஃபீஹோங், இந்தியாவுக்கு தனது வலுவான ஆதரவைத் தெரிவித்துள்ளார். அவர் என்ன சொன்னார் தெரியுமா?
“அமெரிக்கா, இந்தியாவின் மீது 50 சதவிகிதம் வரை வரி விதித்ததை சீனா உறுதியாக எதிர்க்கிறது. இதுபோன்ற செயல்களை எதிர்கொள்ளும்போது, நாம் அமைதியாக இருந்தால், கொடுமைப்படுத்துபவருக்கு இன்னும் தைரியம்தான் வரும். இந்த விஷயத்தில், சீனா இந்தியாவுடன் உறுதியாக நிற்கும்,” என்று அவர் கூறியுள்ளார். மேலும், சுதந்திர வர்த்தகத்தால் ஒரு காலத்தில் பெரும் லாபம் அடைந்த அமெரிக்கா, இப்போது அதே வர்த்தகத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, மற்ற நாடுகளை மிரட்டிப் பேரம் பேசுவதாகவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“இந்தியா-சீனா உறவுகளை மீட்டமைத்தல்” என்ற தலைப்பில் நடந்த ஒரு கூட்டத்தில்தான் சீனத் தூதர் இதைப் பேசியிருக்கிறார். அவர், “இந்தியாவும் சீனாவும் போட்டியாளர்கள் அல்ல, கூட்டாளிகள். நாம் ஆசியாவின் இரண்டு வளர்ச்சி இயந்திரங்கள். நமது ஒற்றுமை ஆசியாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிற்குமே நல்லது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் ஐடி, மென்பொருள் போன்ற துறைகளும், சீனாவின் எலக்ட்ரானிக் உற்பத்தி, உள்கட்டமைப்பு போன்ற துறைகளும் இணைந்து செயல்பட்டால், இரு நாடுகளும் வேகமாக வளர முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில், அமெரிக்காவும் சும்மா இல்லை. வெள்ளை மாளிகையின் மூத்த வர்த்தக ஆலோசகரான பீட்டர் நவாரோ, இந்தியாவை “வரிகளின் மகாராஜா” என்று விமர்சித்துள்ளார். மேலும், இந்தியா சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு “மிகவும் நெருக்கமாக” இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரோ, “இந்த வரிகள் விதிக்கப்பட்டதற்கான காரணங்கள் தனக்குக் குழப்பமாக இருக்கிறது” என்று பதிலளித்துள்ளார்.
ஆக, ஒருபுறம் அமெரிக்காவின் வர்த்தக அழுத்தம்… மறுபுறம், சீனாவின் ஆதரவுக் கரம். இது உண்மையான நட்பா, அல்லது அமெரிக்காவை எதிர்க்க, சீனா கையிலெடுத்திருக்கும் ஒரு ராஜதந்திர வியூகமா அமெரிக்காவின் இந்த அழுத்தத்தைச் சமாளிக்க, இந்தியா சீனாவுடன் கைகோர்க்க வேண்டுமா? என்பது சர்வதேச அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.