ஈரக்குலை நடுங்கும் கோரமான காட்டுத்தீயில் இருந்து உயிரை மட்டும் கையில் பிடித்து தப்பியவர்கள் தங்களது பகீர் அனுபவங்களைப் பகிர்ந்திருக்கின்றனர்
ஜனவரி 7, 2025… காலை பத்தரை மணி… மழையின்றி வறண்ட அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் காடுகளுக்குள் அதிகக் காற்றால் தீப்பற்றி எரியத் தொடங்கியது. அடுத்த 12 நிமிடங்களில் 10 ஏக்கரை துவம்சம் செய்திருந்தது அந்த வரலாறு காணாத காட்டுத் தீ.
அதன் கோர நாக்கு மற்றொரு 12 நிமிடங்களுக்குள் 200 ஏக்கரை வாரிச்சுருட்டி வாயில் போட்டது.
தற்போது வரை 40 ஆயிரம் ஏக்கர் வனம், நிலம், வீடுகள், விலங்குகள், அரிய தாவரங்கள், பள்ளிகள், வணிக வளாகங்களைப் புகையாக ஏப்பம் விட்டுவிட்டது அந்த காட்டுத் தீ.
அடுத்தகட்டமாக மேலும் அதிக நிலப்பரப்புக்களை நோக்கி வேகமாக முன்னேறிச் செல்கிறது.
இந்த காட்டுத் தீ உடமைகளை மட்டுமின்றி குழந்தைகள் உள்பட பலரது உணர்வுகளையும் சூறையாடியுள்ளது.
முந்தைய தினம், நீச்சல் குளத்தில் சந்தோசமாகக் குளித்துவிட்டு குழந்தைகளோடு ஓடிப்பிடித்து விளையாடிய குடும்பம் இன்று வீட்டை இழந்து தெருவில் சோற்றுக்கே கையேந்தி கதறி நிற்கிறது.
இழந்த வீட்டை மீண்டும் கட்டமைக்க தனது piggy bank உண்டியலைத் தருவதாக சம்மதித்த மகளிடம் பெற்றோர் எப்படிக் கூறமுடியும்? எரிந்துபோனது அவள் ஆசையாகப் பல ஆண்டுகளாகச் சேமித்த உண்டியல் பணமும் சேர்த்துத்தான் என்பதை. . .
தன் வீட்டை இழந்தது கூடத் தெரியாத மற்றொரு குழந்தை ஒன்று தனது 3D பேனாவும், கலரிங் பொருட்களும் தீயில் எரிந்ததை நினைத்து அழுது கொண்டிருக்கிறார். .
இறந்த தந்தையின் நினைவாக பொக்கிஷப்படுத்தியிருந்த சன் கிளாஸை இழந்துவிட்டதாக உடைந்தழுதார் மற்றொரு சிறுமி. . .
‘என் வீடு எரிந்துகொண்டிருப்பதை கனத்த மனதோடு டிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறேன்‘ என சொல்லும் போதே இனி வீடற்ற ஏழையாக தெருவில் அலையப் போவதை நினைத்து அழத் தொடங்கிவிட்டார் ஒரு முதியவர்.
தூக்கமே இல்லாமல் தொடர்ந்து தீயை அணைத்த வீரர் ஒருவர் அசதியில் மயங்கிவிட அவரையும் சூழ்ந்தது தீ. அவர் மீதும் தீக்காயம் ஏற்பட நல்வாய்ப்பாக அங்கிருந்த மக்கள் அவரை மீட்டுச் சென்றிருக்கின்றனர். கணவர் ராணுவத்தில் பணியாற்ற, தனது 4 குழந்தைகளையும் அள்ளிப் போட்டு காரை எடுத்து தப்பிக்கும்போது, சுற்றிலும் தீ துரத்தியிருக்கிறது ஒரு தாயை.
அப்போது அங்கு இருந்த காட்சி ‘தான் நரகத்துக்குள் காரை ஓட்டிபயடியே நுழைவது போன்று இருந்ததால் நடுங்கிப்போனதைக் குறிப்பிட்டார் அந்த தாய். தன் குழந்தைகளைக் காப்பாற்ற போராடியதை கண்களில் அதே பய மிரட்சியோடு விவரித்தார் அவர்.
எரிகிற வீட்டில் பிடுங்கியது மட்டும் லாபம் என ஒருபுறம் கொள்ளைச் சம்பவங்களும் அரங்கேறிவருகின்றன.
இரவும் பகலும் என பல வேலைகளைப் பார்த்து கடினமாக உழைத்து கடன்களை எல்லாம் அடைத்து முடித்த நடுத்தர இளைஞரும் இந்த காட்டுத்தீயில் மனம் விட்டுவிட்டார்.
பார்த்துப் பார்த்து கட்டிய தன் வீட்டை கடைசியாக ஒருமுறை நின்று திரும்பிப் பார்ப்பதற்குள், ஓலக்குரல்கள் கேட்க நடுங்கிப் போய் உயிரைக் கையில் பிடித்து தப்பியதாகக் கூறியிருக்கிறார்.
இதில் கெட்டதிலும் ஒரு நல்லது என்றால் மனிதம் உயிர்த்திருப்பது தான்.
உணவுப் பொட்டலங்கள் தீர்ந்த பின் தன்னிடம் கையேந்தி பரிதாபமாகப் பார்த்த குழந்தையைப் பார்த்து நொருங்கிப் போன தன்னார்வலர் ஒருவர் அதன் கையைப் பிடித்து ‘ஸாரி’ சொல்லி அழுததாக தன்னார்வலர் ஒருவர் கூறியுள்ளார்.
இங்கிலாந்தின் இளவரசி ஹேரியும் மேகன் மெர்கலும் உயிர், உடமைகளை இழந்தவர்களைப் பார்த்து ஆறுதல் தெரிவித்தனர். அப்போது, வயதான தீயணைப்பு வீரரை அணைத்து ஆறுதல் சொன்ன போது தேம்பி அழுதார் மேகன்.
சிலர், எதை இழந்தாலும், நம்பிக்கையை இழக்கவில்லை. துணிந்து நின்று பிறருக்கும் உதவுகின்றனர். ‘உசுரு இருக்கே, வேற என்ன வேணும். . பாத்துக்கலாம்’ என அவர்கள் நடந்ததைக் கடந்து பிறரையும் கடக்க வைக்கின்றனர்.
பாடிகார்டோடு காரை விட்டு இறங்காமல் பவுசாக சென்ற பிரபலங்களும் இன்று தான் ஒரு எளிய மனிதர் என உணர்ந்துவிட்டார். மக்கள் சோகத்தில் இருப்பதால் யாரும் தன்னைக் கண்டு சூழ்ந்துகொள்ளவில்லை என்று புரிந்து கொண்டனர்.
பணமும், புகழும் பரவிய தீயில் நொடியில் மாய, மாய உலகில் அனாதரவாக நிற்கின்றனர் அமெரிக்க மக்கள். அவர்கள் விரைவில் மீண்டு வர நாமும் பிரார்த்திப்போம்.