சந்திரகிரகணம் என்பது, பூமி சூரியன் மற்றும் நிலவுக்கு நடுவில் வந்து, அதன் நிழல் நிலவின் மீது விழும் நிகழ்வு என்பது நமக்கு தெரிந்ததே. இது நடக்கும்போது சூரியனின் ஒளி நிலவிற்கு நேரடியாக செல்ல முடியாது. இருப்பினும், பூமியின் வளிமண்டலத்தைத் தாண்டிய சூரிய ஒளி மட்டும் நிலவின் மேற்பரப்பைத் எட்டுகிறது.
பூமியின் வளிமண்டலத்தில், சூரிய ஒளி பயணம் செய்யும் போது ஒரு ஆச்சரியமான இயற்கைச் செயல்பாடு நடக்கிறது. நீல நிற ஒளிக்கதிர்கள் வளிமண்டல வாயுக்களால் சிதறடிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற ஒளிக்கதிர்கள் நீளமான அலைநீளம் கொண்டதால் சிதறடிக்கப்படாமல் பூமியின் வளிமண்டலத்தைத் தாண்டி, நிலவின் பரப்பை அடைகின்றன. இதனால், கிரகணத்தின் போது நிலவு ரத்த சிவப்பு அல்லது ஆழ்ந்த ஆரஞ்சு நிறத்தில் பிரகாசிக்கிறது.
இது இயற்கையின் இயல்பான ஒளியியல் பிரதிபலிப்பு மட்டுமே. எந்த விதமான அபாயத்திற்கும் அறிகுரியல்ல. நேற்றைய சந்திரகிரகணத்தில், நிலவு பூமியின் நிழலின் மையப்பகுதியிலேயே நீண்ட நேரம் அதாவது 82 நிமிடங்கள் பயணித்தது. அந்த நேரத்தில் வளிமண்டலத்தில் உள்ள தூசி, ஈரப்பதம் மற்றும் வாயுக்கள் சூரிய ஒளியை அதிகமாக சிதறடித்தன.
இதனால், நிலவிற்கு சென்றடைந்த ஒளியில் சிவப்பு நிறக் கதிர்கள் மிக அதிக அளவில் பிரதிபலித்து, ஆழமான சிவப்பு நிறமானது. உண்மையில் “Blood Moon” என்று சொல்வதற்கு ஏற்றபடி செம்பு நிறத்துடன் கலந்த செந்நிறமாக நேற்றைய நிலவு காட்சியளித்து பிரமிப்பை ஏற்படுத்தியது.
சந்திரகிரகணத்தில் நிலவு சிகப்பாக மாறுவது அபாயத்தின் அறிகுறி அல்ல. அது பூமியின் வளிமண்டலத்தால் ஏற்படும் இயல்பான ஒளி சிதறல். நேற்று நிகழ்ந்த நீண்ட கிரகணம், வளிமண்டல சூழ்நிலைகளுடன் சேர்ந்து, நிலவை ரத்த சிவப்பு நிறத்தில் அபூர்வமாகக் காட்டியது.