‘ஓடி ஒழிஞ்சது யாரு?’ -முதலமைச்சர் விஜயை கிழித்தெடுத்த MK ஸ்டாலின்!

“படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று சொல்லிவிட்டு, இப்போது மக்கள் முன்னாள் நீங்கள் நடித்துக்கொண்டு இருக்கிறீர்கள்!” என்று முதலமைச்சர் விஜயை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழக அரசியலில் தற்போது வெடித்துள்ள இந்த மாபெரும் வார்த்தைப்போர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! மதுராந்தகத்தில் த.வெ.க தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரையைத் தொடர்ந்து, அவருக்கு மு.க.ஸ்டாலின் மிகக் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.

அ.தி.மு.க-வில் இருந்து மரகதம் குமரவேலை விலைக்கு வாங்கி, அவரை அருகில் வைத்துக்கொண்டே ‘த.வெ.க தூய சக்தி, தி.மு.க தீய சக்தி’ என்று விஜய்யால் எப்படிக் கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது என ஸ்டாலின் சரமாரியாகக் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், கூட்டணி எம்.எல்.ஏ-க்களை விலை கொடுத்து வாங்குவதுதான் தூய சக்தியா என்றும் அவர் விமர்சித்துள்ளார். த.வெ.க வேட்பாளர்களை மக்கள் விரட்டி அடிப்பது முதலமைச்சருக்குத் தெரியாதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தி.மு.க-வும் பா.ஜ.க-வும் ஒன்றுதான் என விஜய் பேசியதற்குப் பதிலளித்த ஸ்டாலின், பா.ஜ.க-வை எதிர்த்து முதல்வர் விஜய் இதுவரை எத்தனை போராட்டங்களை நடத்தியுள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

பா.ஜ.க-விடம் த.வெ.க காட்டும் அமைதி, ஒரு சரணாகதி அரசியல்தான் என அவர் குற்றம் சாட்டினார். மேலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், இப்போது ‘கஜானா காலி’ என்று முதல்வர் விஜய் நாடகமாடுவதாகக் கடுமையாகச் சாடினார்.

தற்போதைய த.வெ.க ஆட்சியின் திட்டங்கள் அனைத்தும், தி.மு.க கொண்டுவந்த திட்டங்களின் பெயர்களை மாற்றியவை மட்டுமே என்றும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்தார்.

தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை விட்டுவிட்டுப் பார்த்தால், தற்போதைய த.வெ.க ஆட்சியில் கிடைத்தது மின்வெட்டு, விலைவாசி உயர்வு, டெங்கு காய்ச்சல் மற்றும் பால் தட்டுப்பாடு ஆகியவை மட்டுமே என ஸ்டாலின் மிகக் கடுமையாக விமர்சித்தார்.

ஜெம் வீரமணி வழக்கு குறித்து உயர்நீதிமன்றம் அளித்த அறிவுரைகளைக் கூட அதிகாரிகள் முதலமைச்சருக்குத் தெரிவிக்கவில்லையா என்றும், பேப்பரைத் தினமும் படித்திருந்தால் இது தெரிந்திருக்கும் என்றும் அவர் கேலியாகச் சுட்டிக்காட்டினார்.

கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தின்போது முதலமைச்சர் விஜய் கோழைத்தனமாக ஓடி ஒளிந்துகொண்டார் எனக் கூறிய ஸ்டாலின், அந்தச் சம்பவத்தை வைத்துத் தாங்கள் எந்த அரசியல் லாபமும் தேட முயலவில்லை என்று தெரிவித்தார்.

இறுதியாக, “ஒரு முதலமைச்சர் பொறுப்பிற்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா என்பதை நீங்கள் சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள்” என முதல்வர் விஜய்க்கு நேரடியாகச் சவால் விட்டுள்ளார். இரண்டு தலைவர்களுக்கு இடையிலான இந்த நேரடி மோதல், தமிழக அரசியல் களத்தை இப்போது தகதகக்க வைத்துள்ளது.

Related News

Latest News