சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடலோர தமிழகம் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், தெற்கு தெலுங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழகத்தின் வழியாக காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிதமான மழையும், ஏனைய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
6-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யலாம். 7, 8-ந்தேதிகளில் லேசான மழையும், 9, 10-ந்தேதிகளில் சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று, நாளை மாலை அல்லது இரவில் சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
