பெண்களுக்கு ₹2,500 எப்போது? முக்கிய அப்டேட்!

தமிழகப் பெண்களின் வங்கி கணக்கிற்கு 2,500 ரூபாய் எப்போது வரும்? இதுதான் இப்போது தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் எதிரொலிக்கும் ஒரு மிகப்பெரிய கேள்வி. தேர்தல் நேரத்தில் ‘மதிப்புமிகு மகளிர் திட்டம்’ எனப் பெயரிட்டு, மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கொடுத்த அந்த வாக்குறுதி, பெண்களிடையே ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு வாரங்கள் கடந்த நிலையில், கடந்த மே 15-ஆம் தேதி பெண்களின் கணக்கிற்கு பழைய நடைமுறைப்படி வெறும் 1,000 ரூபாய் மட்டுமே வந்திருப்பது இப்போது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

ஏன் இந்தத் தாமதம்? வாக்குறுதி அளித்தபடி ஏன் இன்னும் 2,500 ரூபாயாக உயர்த்தப்படவில்லை? இது குறித்து முதலமைச்சர் அலுவலகம் ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. அதாவது, இந்தத் திட்டத்தை முழுமையாக ‘மறுசீரமைப்பு’ செய்ய வேண்டியிருப்பதால் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது என்பதே அந்த விளக்கம். ஆனால், எதார்த்தமான சூழலைப் பார்த்தால், அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்தத் தொகை உயர்வு சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. இதற்குப் பின்னால் மூன்று முக்கியக் காரணங்கள் உள்ளன.

முதலாவதாக, பயனாளிகளின் எண்ணிக்கை. முந்தைய ஆட்சியில் 1.15 கோடிப் பெண்களுக்கு மட்டுமே இந்தத் தொகை வழங்கப்பட்டது. ஆனால், விஜய் தனது வாக்குறுதியில் ‘அனைத்துப் பெண்களுக்கும்’ இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறியிருந்தார். அப்படியென்றால், விடுபட்ட கோடிக்கணக்கான பெண்களை இந்தப் பட்டியலில் இணைக்க வேண்டும். இதற்கான புதிய கணக்கெடுப்பு மற்றும் கள ஆய்வுப் பணிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படவில்லை.

இரண்டாவதாக, தொழில்நுட்பச் சிக்கல்கள். புதிய விண்ணப்பங்களைப் பெறுவதற்கான சாப்ட்வேர் மற்றும் செயலிகளை உருவாக்குவது, தரவுகளைச் சரிபார்ப்பது போன்ற நிர்வாகப் பணிகளை முடிக்கவே குறைந்தது சில மாதங்கள் ஆகும். மூன்றாவதாக, நிதி மேலாண்மை. 1,000 ரூபாயை 2,500-ஆக உயர்த்தும்போது மாநில அரசுக்கு ஆண்டுக்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கூடுதல் நிதி தேவைப்படும். இதற்கான நிதி ஆதாரங்களைத் திரட்டி, பட்ஜெட்டில் திருத்தங்கள் கொண்டு வருவது என்பது ஒரு மிகப்பெரிய சவால்.

“ஏற்கனவே இருக்கும் திட்டத்தில் பணத்தை உயர்த்துவதற்கு என்ன மறுசீரமைப்பு வேண்டி கிடக்கிறது?” என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இப்போதே விமர்சனக் கணைகளைத் தொடுக்கத் தொடங்கிவிட்டன. மே மாத இறுதிக்குள் இது குறித்து முதலமைச்சர் விஜய் ஒரு விரிவான அறிவிப்பை வெளியிடுவார் என்று சொல்லப்பட்டாலும், புதிய பயனாளிகள் சேர்க்கை மற்றும் தகுதிப் பட்டியல் தயாரிப்பு எனப் பல கட்டங்களைத் தாண்ட வேண்டியுள்ளதால், பெண்களுக்கு 2,500 ரூபாய் கைக்குக் கிடைக்க இன்னும் 2 முதல் 3 மாதங்கள் வரை தாராளமாக ஆகலாம் என்பதே தற்போதைய கள நிலவரம்.

Related News

Latest News