குடும்பத் தலைவிகளுக்கான ரூ.2500 உதவி எப்போது தொடங்கும்? அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…

தமிழ்நாட்டில் புதிய அரசை அமைத்துள்ள விஜய் தலைமையிலான அரசு, தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2500 உரிமைத் தொகை, வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகளை விஜய் வெளியிட்டிருந்தார்.

ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அவரது முதல் கையெழுத்து பெண்களுக்கு ரூ.2500 வழங்கும் திட்டமாக இருக்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஆரம்ப கட்டமாக 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட மூன்று முக்கிய திட்டங்களுக்கு அவர் ஒப்புதல் அளித்தார். அதே நேரத்தில், முந்தைய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் தொடரும் என்றும், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விரிவுபடுத்த தேவையான கால அவகாசம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, மே மாதத்திற்கான ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இன்று வரவு வைக்கப்பட்டது. இதனால், தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட ரூ.2500 திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு பெண்களிடையே அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “ஒவ்வொரு துறையையும் முதல்வர் விஜய் ஆய்வு செய்து வருகிறார். பெரிய அளவிலான நிதி ஒதுக்கீடுகள் பட்ஜெட்டிற்கு பிறகே செய்ய முடியும். தேவையான நிதி ஆதாரங்களை சரிசெய்த பிறகே மகளிர் உரிமைத் தொகையை ரூ.2500 ஆக உயர்த்துவது குறித்து அரசு முடிவு எடுக்கும்” என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பு, பெண்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News