அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், திடீரென நாளை மருத்துவப் பரிசோதனைக்குச் செல்லவிருக்கிறார். இது அமெரிக்க அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. காரணம், “இது ஒரு வழக்கமான வருடாந்திர பரிசோதனைதான்” என்று வெள்ளை மாளிகை சொன்னாலும், அவர் கடைசியாக செக்-அப் செய்தது வெறும் ஆறு மாதங்களுக்கு முன்புதான்!
அப்போ, எதுக்கு இந்த அவசர செக்-அப்? கடந்த சில மாதங்களாகவே, அதிபர் டிரம்பின் உடல்நிலை குறித்து பல கேள்விகள் எழுந்து வருகின்றன. பொது நிகழ்ச்சிகளில் வரும்போது, அவரது கணுக்கால் வீங்கியிருப்பதையும், வலது கையில் தொடர்ந்து காயம் இருப்பதையும் போட்டோகிராபர்கள் படம் பிடித்துள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இதற்கு வெள்ளை மாளிகை, “அவருக்கு நாள்பட்ட சிரை பற்றாக்குறை (Chronic Venous Insufficiency) என்ற சாதாரண பிரச்சனைதான் இருக்கிறது. 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இது சகஜம்” என்று விளக்கம் கொடுத்தது. கையில் இருக்கும் காயம், “அடிக்கடி கைகுலுக்குவதால் ஏற்பட்ட எரிச்சல்” என்றும் கூறியது. “அதிபர் சிறந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறார்” என்றும் மருத்துவர்கள் அறிக்கை கொடுத்தனர்.
ஆனாலும், இந்த விளக்கங்கள் பொதுமக்களை சமாதானப்படுத்தவில்லை. 79 வயதான டிரம்ப், அமெரிக்காவின் மிக வயதான அதிபர் ஆவார். “நான் 30 வருஷத்துக்கு முன்னாடி இருந்ததை விட சூப்பரா இருக்கேன்” என்று அவரே கூறினாலும், இந்த திடீர் மருத்துவப் பரிசோதனை, அவர் உண்மையிலேயே நலமாக இருக்கிறாரா என்ற சந்தேகத்தை மீண்டும் கிளப்பியுள்ளது. ஜோ பைடன், தன் உடல்நிலையைக் காரணம் காட்டி தேர்தலிலிருந்து விலகிய நிலையில், டிரம்பின் இந்த செக்-அப் முடிவுகளை உலகமே உற்று நோக்குகிறது.