அமெரிக்கா, இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50% வரி நடைமுறைக்கு வந்தே விட்டது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வரும் ஆகஸ்ட் 31, தியாஞ்சின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்க சீனாவுக்குச் செல்கிறார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவுக்கான அவரது முதல் பயணம் இது. இதுவே இரண்டு நாடுகளின் உறவுகள் மறுசீரமைப்பு என்ற கட்டத்துக்குள் நுழையும் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
இந்த உச்சிமாநாட்டுக்கு முன்பே இருநாடுகளின் வெளியுறவுத் தலைமைகள் டெல்லியில் சந்தித்து, பன்முக முறைமைகளை மீட்டெடுப்பது, 2025ம் ஆண்டு முழுவதும் நட்பு நிகழ்ச்சிகளை இணைந்து கொண்டாடுவது போன்ற ஒப்புதல்களைப் பதிவு செய்துள்ளன.
மேலும் 2020க்குப் பிறகு நிறுத்தப்பட்டிருந்த இந்தியா–சீனா நேரடி விமான சேவைகளை விரைவில் மீண்டும் தொடங்கலாம் எனவும் தெரிகிறது. ஆனால், இந்த நட்பு கண்மூடித்தனமானது அல்ல என்றும் எல்லைப் பிரச்சினையை இப்போதும் கவனத்தில் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே சமயம், இந்தியா குவாட் அதாவது அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளடங்கிய கூட்டமைப்பு மீது தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தி வருகிறது. அதாவது, சீனாவுடனான உறவைக் கையாளும் போதும், இண்டோ–பசிபிக் கூட்டமைப்புகளை இந்தியா விட்டுத் தரவில்லை.
இதற்கிடையே, அமெரிக்காவின் எதிர்பாராத வரித் தீர்மானங்களும் இந்தியாவுக்கு சவாலாக இருக்கின்றன. மற்றொரு புறம் 2020க்கு பிறகு இந்திய – சீன உறவைக் கெடுத்த எல்லை சர்ச்சையின் நினைவு இன்னும் மங்கவில்லை. ஆனால், நேரடி விமானங்கள், வர்த்தக முதலீடு தளர்வுகள், உயர்மட்ட சந்திப்புகள் ஆகிய முன்னேற்றங்கள் தொடர்ச்சியாக நகர்ந்தால், இந்திய – சீனா உறவு எச்சரிக்கையுடன் நகர்ந்து பொருளாதார பாதுகாப்பு சமநிலையை உருவாக்கும் சாத்தியம் உள்ளது.