Friday, January 24, 2025

Trainல டிரைவர் தூங்கிட்டா நம்ம கதை என்னாகும்?

அதிக மக்கள்தொகை  கொண்ட நம் நாட்டில், பெருமளவு மக்கள் நீண்ட தூர பயணத்துக்கு தேர்ந்தெடுக்கும் போக்குவரத்தாக ரயில் அமைந்துள்ளது.

ரயில் பெர்த்களில் பயணிகள் ஒருபுறம் வசதியாக பயணம் செய்தாலும்,  ரயில் இயங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் கார்ட், லோகோ பைலட் மற்றும் அசிஸ்டன்ட் பைலட் ஆகிய மூன்று பேரால் தூக்கத்தை நினைத்து கூட பார்க்க முடியாது.

ரயில்வே விதிமுறைப்படி, ரயில் இன்ஜினை  இயக்குபவர்களுக்கு, மாதத்தில் 4 முறை 30 மணி நேர ஓய்வோ அல்லது 5 முறை 22 மணி நேர ஓய்வோ வழங்கப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் ஓடும் 19,000 ரயில்களுக்கு 60,000 லோகோ பைலட்கள் இருக்கிறார்கள்.

எனினும், ஆள் பற்றாக்குறையால் அவ்வப்போது, டிரைவர்கள் ஓவர்டைம் செய்ய வைக்கப்படுகிறார்கள்.

அப்படி வேலை செய்யும் டிரைவர்கள் பயணத்தின் போது தூங்கிவிட்டால், ரயிலில் உள்ள பயணிகளின் நிலை என்ன ஆகும் என எப்போதாவது யோசித்ததுண்டா?

ரயிலில் Vigilance Control Device என்ற கருவி ரயிலின் பிரேக், ஹார்ன், த்ராட்டில் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டு இருக்கும்.

60 நொடிகளுக்குள் இதில் ஏதாவது ஒரு கருவியை கட்டாயம் லோகோ பைலட் இயக்க வேண்டும்.

அப்படி பயன்படுத்த தேவை இல்லாத பட்சத்தில் ரீசெட் பட்டனை அழுத்த வேண்டும். அப்படி 60 நொடிகளுக்கு எதுவும் இயக்கப்படாத பட்சத்தில் எச்சரிக்கை விளக்கு எரியும்.

அப்படியும் ரீசெட் பட்டனோ, வேறு எந்த இயக்கமும் இல்லை என்றால் 76வது நொடியில் இருந்து அலாரம் அடிக்கத் துவங்கும்.

அப்படியும், ஏதும் நடக்கவில்லை என்றால் ரயிலில் உள்ள கார்டுக்கு தகவல் சென்றபின், எமெர்ஜென்சி பிரேக் மூலம் ரயில், எந்த வேகத்தில் சென்று கொண்டிருந்தாலும் நிறுத்தப்படும்.

அப்படி நிறுத்தப்பட்ட ரயிலை திரும்பவும் இயக்க ரீஸ்டார்ட் செய்ய வேண்டும்.

இவ்வாறான தொழில்நுட்ப வளர்ச்சியால் விபத்துகள் தவிர்க்க பட்டாலும் கூட, ரயில் ஓட்டுநர்களுக்கு சரியான ஓய்வு கிடைப்பதை உறுதி செய்வதும் அவசியம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Latest news