கொண்டையில் என்ன பூ?

344
Advertisement

பூ சாகுபடிக்கும் விற்பனைக்கும் புகழ்பெற்றது மதுரை.
தினமும் சராசரியாக 50 டன் மல்லிகைப் பூ மதுரையிலுள்ள
பூச்சந்தைக்கு வருகிறது.

இந்த பூ சாகுபடியிலும் விற்பனையிலும் ஒரு லட்சத்துக்கும்
மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஐந்தாயித்துக்கும்
அதிகமான விவசாயிகள் மல்லிகைப்பூ பயிரிடுவதை மட்டுமே
முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.

திண்டுக்கல், கொடைரோடு, நிலக்கோட்டை, உசிலம்பட்டி,
அருப்புக்கோட்டை, சங்கரன்கோவில்,மார்த்தாண்டம், ஓசூர்
போன்ற நகரங்களில் பூ மார்க்கெட் இருந்தாலும் மதுரை
மல்லிகைப் பூச்சந்தையே மிகவும் பிரபலமானது/

மதுரையில் சாகுபடியாகும் மல்லிகைப் பூவே மணம்நிறைந்ததாக
உள்ளது. இந்தப் பூச்செடியின் தாய்ச்சேடி ராமேஸ்வரம் அருகிலுள்ள
தங்கச்சிமடம் பகுதியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

குண்டுகுண்டாய், வெள்ளைவெள்ளையாய், தடிமனாய்ப்
பூக்கும் மதுரை மல்லி இரண்டு நாட்கள் ஆனாலும் வாடாமலும்
உதிராமலும் நன்கு வாசம் வீசும். மதுரை மல்லியின் வாசம்
தெருவையே வசீகரிக்கும்.

தேவை குறைவான காலத்தில் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு
விற்பனையாகும் மதுரை மல்லி தேவை அதிகமான கிராக்கியான
காலத்தில் ஒரு கிலோ 2 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகும்.

தலையில் சூடுவதற்கு மட்டுமன்றி, விழாக்களுக்கும் விசேஷங்களுக்கும்
பயன்படும் இந்த மல்லிகைப் பூவிலிருந்து வாசனைத் திரவியமும்
தயாரிக்கப்படுகிறது.

மதுரை மல்லி புவிசார் குறியீடு பெற்றுள்ளது.