நம் நாட்டில் உள்ள பெரும்பாலான குடும்பங்களில் தங்க நகைகளை அடமானமாக வைத்து கடன் பெறுவது காலம் காலமாக பின்பற்றி வரும் வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் இதற்கு மாற்றாக தற்போது வங்கிகள் மற்றும் NBFC நிறுவனங்கள் “கோல்டு ஓவர்ட்ராஃப்ட்” (Gold Overdraft) என்ற கடன் வசதியை அதிகளவில் வழங்கத் தொடங்கியுள்ளன. ஆனால் இதை பலரும் கவனிப்பது இல்லை.
கோல்டு ஓவர்ட்ராஃப்ட் என்பது, உங்கள் தங்க நகைகள் அல்லது தங்க சொத்துகளை அடமானமாக வைத்து, ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் (credit limit) பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுக்கக்கூடிய வசதியை அளிக்கும். இது ஒரு கிரெடிட் கார்டு அல்லது வங்கி ஓவர்ட்ராஃப்ட் போன்றே செயல்படுகிறது.
தங்க நகைகடனில், முழு தொகையும் ஒரே முறையில் (lumpsum) வழங்கப்படும். ஆனால் தங்க ஓவர்ட்ராஃப்டில், நீங்கள் தேவையான அளவு பணத்தை மட்டுமே எடுத்து அதற்கான வட்டியை மட்டும் செலுத்தும் வாய்ப்பு உள்ளது.இதில் உள்ள முக்கிய வித்தியாசம் தங்க கடனில் முழு கடன் தொகைக்கு ஆரம்பத்திலிருந்தே வட்டி விதிக்கப்படும். ஆனால் கோல்டு ஓவர்ட்ராஃப்டில், நீங்கள் எடுத்த பணத்திற்கும், அதை பயன்படுத்திய காலத்திற்கும் மட்டுமே வட்டி வசூலிக்கப்படும். இதனால் தேவைக்கு ஏற்ப பணம் பயன்படுத்தும் நபர்களுக்கு இது அதிக நன்மையை அளிக்கிறது
நகைகளை வைத்து நகைக்கடன் பெறுகிறீர்கள் என்றால் மொத்த தொகையும் அதாவது உதாரணமாக 5 லட்சம் முதல் நாளே உங்கள் கைக்கு வந்துவிடும். நீங்கள் 5 லட்சத்தை உடனே செலவு
செய்தாலும்,செய்யாவிட்டாலும் சரி முதல் நாளில் இருந்து வட்டி செலுத்தியாக வேண்டும்.ஆனால் கோல்டு ஓவர்ட்ராஃப்ட்-ல் இதே 5 லட்சத்திற்கான கடன் லிமிட்டை நீங்கள் உங்களுடைய நகைக்கு பெற முடியும். முதல் மாதத்தில் 1 லட்சம், 2வது மாதத்தில் 2 லட்சம், 3 மாதத்தில் 2 லட்சம் என பிரித்து வாங்க முடியும். வட்டி கணக்கீடும் தொகை வாங்கப்பட்ட நாளில் இருந்து தான் கணக்கிடப்படும். இதனால் வட்டி தொகையில் பெரும் தொகையை உங்களால் இந்த கோல்டு ஓவர்ட்ராஃப்ட் திட்டத்தில் சேமிக்க முடியும்.
ஒரே தவணையில் பெரிய தொகை தேவையில்லாமல், அவ்வப்போது பணம் தேவைப்படும் நபர்களுக்கு கோல்டு ஓவர்ட்ராஃப்ட் மிகவும் பொருத்தமானது. ஒரே தவணையில் மொத்த தொகையும் வேண்டும் என நினைப்பவர்களுக்கு தங்க கடன் தான் சரியான தேர்வு.தற்போது வங்கிகளில் தங்க கடனின் வட்டி விகிதம் சுமார் 8.75% முதல் 9.30% வரை உள்ளது. கோல்டு ஓவர்ட்ராஃப்ட் வசதிக்கும் கிட்டத்தட்ட இதே போன்ற வட்டி விகிதங்கள் இருந்தாலும், சில சமயங்களில் processing charges போன்ற ஆரம்ப செலவுகள் அதிகமாக இருக்கலாம். இதை கவனித்து அதன்பின்பு வாங்கவும்.
கோல்டு ஓவர்ட்ராஃப்ட் வசதிகள் பொதுவாக குறுகிய காலத்திற்கு வழங்கப்படுகின்றன. அவை காலாவதியான பின்பு புதுப்பிக்கப்பட வேண்டும். இதற்காக திரும்ப செலுத்தும் தேதி, வட்டி விகிதம், மற்றும் தாமதமானால் விதிக்கப்படும் அபராதங்கள் போன்ற நிபந்தனைகளை கவனமாக பின்பற்ற வேண்டும். கடன் திருப்பிச் செலுத்தப்படாத நிலையில், அடமானமாக வைத்துள்ள தங்கத்தை ஏலத்தில் விடும் விதிமுறைகளும் இருக்கும் என்பதால், சரியான தேதிக்குள் தங்க நகை கடனை செலுத்தி நிதி ஒழுங்கை கடைப்பிடிப்பது அவசியம்.
இந்த வசதியை பெற, நீங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் அடையாள சான்று, முகவரி சான்று மற்றும் விண்ணப்ப படிவம் போன்ற அடிப்படை ஆவணங்கள் தேவையாகும். ஒவ்வொரு வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் விதிமுறைகள் சிறிய அளவில் மாறுபடலாம். கோல்டு ஓவர்ட்ராஃப்ட் என்பது நெகிழ்வான மற்றும் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தக்கூடிய கடன் வசதியாக உள்ளது. பணம் அவ்வப்போது தேவைப்படும் குடும்பங்களுக்கு இது செலவு குறைவான மற்றும் சுலபமான தேர்வாக இருக்கும். ஆனால் சரியான திட்டமிடலுடன் பயன்படுத்தினால் மட்டுமே அதன் முழு பயனை பெற முடியும்.
