Wednesday, June 11, 2025

சஞ்சு முதுகில் ‘குத்தியது’ இவரா? சென்னை, கொல்கத்தா ‘கடும்போட்டி’

முன்னெப்போதையும் விட இந்த 2025ம் ஆண்டு IPL தொடர், ரசிகர்களுக்கு பல்வேறு சுவாரஸ்யங்களை வாரி வழங்கியுள்ளது. இதுவரை கோப்பை வெல்லாத பெங்களூரு – பஞ்சாப் அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. இதில் RCB கோப்பையை வென்று அசத்தியது.

6வது கோப்பைக்கு அடிபோட்ட சென்னை, முதல் பாதியிலேயே தொடரில் இருந்து வெளியேற மும்பையோ, பஞ்சாப்பிடம் இறுதிப்போட்டி வாய்ப்பினை இழந்து வெளியேறியது. முதல் IPL கோப்பையை முத்தமிட்டு அசத்திய ராஜஸ்தான், 2வது IPL கோப்பைக்கு இன்னும் முட்டி மோதிக்கொண்டு இருக்கிறது.

இதற்கு அணியில் நடக்கும் உள்குத்துகளும் முக்கிய காரணமாகும். நடப்பு தொடரில் கேப்டன் சஞ்சு சாம்சன் காயத்தால் அவதிப்பட, அவருக்கு பதிலாக இளம்வீரர் ரியான் பராக் அணியை வழிநடத்தினார். இதற்கிடையே ரியான் பராக், யஜஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் கேப்டன் பதவிக்கு முட்டி மோதுவதாகக் கூறப்படுகிறது.

ரியானை விடவும், இந்திய அணியில் விளையாடும் ஜெய்ஸ்வாலுக்கு மதிப்பு அதிகமென்பதால், அடுத்த சீசனுக்கு ஜெய்ஸ்வாலை கேப்டனாக்கிட ராஜஸ்தான் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்த உள்குத்து கலவரங்களினால் அதிகம் பாதிக்கப்பட்ட சாம்சன், இதன் காரணமாக அணியை விட்டு வெளியேற முடிவு செய்து விட்டாராம்.

இந்தநிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரு அணிகளும் சாம்சனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ரஹானேவை கேப்டனாக்கிய கொல்கத்தாவால், நடப்பு சாம்பியன் அந்தஸ்தை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.

அடுத்த கேப்டனாக பார்க்கப்பட்ட வெங்கடேஷ் அய்யர் மோசமான பார்மில் இருக்கிறார். இதனால் சாம்சன் போன்ற ஒருவர் அணிக்குள் வந்தால் நல்லது என்று KKR நினைக்கிறதாம். மறுபுறம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பதால், சாம்சனை டிரேடிங்கில் வாங்கிட, CSK ஸ்கெட்ச் போட்டு வருவதாகத் தெரிகிறது.

சென்னையில் ருதுராஜ் இருப்பதால் கேப்டன் பதவி சாம்சனுக்கு கிடைக்க வாய்ப்புகள் குறைவு. ஆனால் கொல்கத்தா கேப்டன் பதவியை தங்கத்தட்டில் வைத்து காத்துக்கொண்டு இருக்கிறது. இதனால் சாம்சன் கொல்கத்தா அணிக்கு செல்லவும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

எனவே இந்த விஷயத்தில் சஞ்சு சாம்சன் என்ன முடிவு எடுக்கப் போகிறார்?, என்பதை வழக்கம்போல நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news