Saturday, July 12, 2025

காணாமல் போன சகோதரர்களை இணைத்த வானிலை அறிவிப்பு

சிறுவயதில் காணாமல்போன இரண்டு சிறுவர்கள் பல்லாண்டுகளுக்குப் பிறகு, தொலைக்காட்சி செய்தியால் ஒன்றுசேர்ந்துள்ளனர்.

கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் ராண்டி வெயிட்ஸ். இவர் சமீபத்தில் உள்ளூர் வானிலை நிலவரத்தை அறிந்துகொள்வதற்காகத் தொலைக்காட்சி செய்தித் தொகுப்பைப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது வானிலை முன்னறிவிப்பை வாசிக்கத் தொடங்கினார் செய்தி வாசிப்பாளர். அதேசமயம், திரையில் செய்தி வாசிப்பாளரின் பெயர் தோன்றியது.

அப்பெயரைப் பார்த்ததும் ராண்டிக்கு மின்னலென்று ஒரு சிந்தனை தோன்றியது. ராண்டி வெயிட்ஸின் பெயரின் கடைசி வார்த்தையும், வானிலை அறிவிப்பாளர் பெயரின் கடைசி வார்த்தையும் ஒரேமாதிரியாக இருப்பதைக்கண்டு மனம் துடித்தது. தனது தந்தை யார் என்று தெரியாமலேயே வளர்ந்துவிட்ட ராண்டிக்குத் திரையில் தோன்றிய நபரைப் பற்றித் தெரிந்துகொள்ளும் உந்துதல் ஏற்பட்டது.

உடனடியாக அந்தத் தொலைக்காட்சி அலுவலகத்தைத் தொடர்புகொண்டு வானிலை அறிவிப்பாளர் பற்றிய விவரங்களைக் கேட்டார். தொலைக்காட்சி அலுவலகமும் செய்தி வாசித்தவரின் தொடர்பு எண்ணைக் கொடுத்தது.

அதைத்தொடர்ந்து ராண்டி,தொலைக்காட்சி வானிலை அறிவிப்பாளரைத் தொடர்புகொண்டார்.

பிறகென்ன..?

ராண்டியும் வானிலை அறிவிப்பாளரும் நேரில் சந்தித்துப் பேசினர். அப்போதுதான் 20 ஆண்டுகளுக்குமுன் இருவரும் பிரிந்துபோனதும், இருவரும் சகோதரர்கள் என்பதும் தெரியவந்தது.

சுமார் 50 வயதில் இணைந்த அந்த உடன்பிறப்புகள், தங்கள் தந்தை பற்றியும் குடும்பம் பற்றியும் பேசி உறவாடி மகிழத் தொடங்கினர்.

ஒருவரையொருவர் அறியாத சகோதரர்களைத் தொலைக்காட்சி செய்தித் தொகுப்பு இணைத்த தகவல் தற்போது சமூக ஊடகத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news