‘வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு’ என்பதற்கு எடுத்துக்காட்டாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மாறியுள்ளது. IPL வரலாற்றில் அதிகமுறை Play Offக்கு சென்று, 5 கோப்பைகளை கைவசம் வைத்திருக்கும் சென்னைக்கு, இந்த 2025ம் ஆண்டு போதாத காலமாகி விட்டது.
3 வெற்றிகளுடன் முதல் அணியாக Play Off ரேஸில் இருந்து வெளியேறி, அதிர்ச்சி அளித்தது. என்றாலும் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, தற்போது இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கி வருகிறது. 17 வயது ஆயுஷ் மாத்ரேவும், 20 வயது நூர் அஹமதுவும் சென்னை அணிக்காக கலக்கி வருகின்றனர்.
இந்தநிலையில் ராஜஸ்தானுக்கு எதிராக மண்ணைக் கவ்வினாலும், இரண்டு இளம்வீரர்களின் ஆட்டம் சென்னை அணி நிர்வாகத்திற்கு மிகுந்த ஆறுதல் அளித்துள்ளது. ஆல்ரவுண்டர் அன்ஷூல் கம்போஜ் மற்றும் அதிரடி பேட்டர் டெவால்ட் பிரேவிஸ் இருவரும் தான் அந்த வீரர்கள்.
பவுலிங்கில் 3 ஓவர்களை வீசி 21 ரன்களை விட்டுக்கொடுத்த அன்ஷூல், 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். பேட்டிங்கில் கடைசிக்கட்டத்தில் வாய்ப்பு கிடைத்தாலும், எதிர்கொண்ட 2வது பந்தையே பவுண்டரிக்கு விரட்டினார்.
இதேபோல பிரேவிஸும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், அதிரடியாக ஆடி 42 ரன்களைக் குவித்தார். இவர்கள் இருவர் குறித்து கேப்டன் தோனி, ” அன்ஷூலின் பவுலிங் நன்றாக இருந்தது. பிரேவிஸ் ரிஸ்க் எடுத்து ஆடினார், ” என்று பாராட்டியுள்ளார்.
இதேபோல பயிற்சியாளர் பிளெமிங்கும், ” அன்ஷூல் கம்போஜ் 138 – 139 கி.மீ வேகத்தில் சிறப்பாக பந்து வீசுகிறார். அவர் தேர்வு செய்யும் சரியான லெந்த்கள்தான் அவரின் பெரிய பலம். காற்றில் பந்தை அலையவிட்டு வீசுகிறார். அவரிடம் நல்ல திறன் இருக்கிறது. அன்ஷூலின் செயல்பாட்டில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்,” என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
ஆயுஷ் மாத்ரே, பிரேவிஸ், உர்வில் படேல், சிவம் துபே என சென்னையின் பேட்டிங் ஆர்டர் நன்றாக இருக்கிறது. ஆனால் பவுலிங் தான் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. தற்போது அன்ஷூல் தன்னுடைய பந்துவீச்சு திறமையை நிரூபித்து இருப்பதால், CSK நிர்வாகம் “ஹேப்பி மோடிற்கு” மாறியுள்ளது.