Wednesday, July 16, 2025

”எங்களுக்குன்னு ஒரு பாலிசி இருக்கு” : ரோஹித் – கோலி ஓய்வு குறித்து BCCI விளக்கம்

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டின் ராஜாவாக வலம்வந்த விராட் கோலி இருவரும் அடுத்தடுத்து ஓய்வு அறிவித்தனர். இது கிரிக்கெட் வட்டாரங்களில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ரோஹித்தை விடவும் விராட்டின் ஓய்வு தான் அனைவருக்கும் பெரிய அதிர்ச்சி. ஏனெனில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றவர் கோலி. இதனால் அவரின் ஓய்வு சர்வதேச அளவில் மிகப்பெரும் பேசுபொருளாக ஆனது.

இருவரின் ஓய்வுக்கும் BCCI தான் காரணம் என தொடர்ச்சியாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் BCCI இந்த விவகாரத்தில் தொடர்ந்து மவுனம் காத்து வந்தது. இந்தநிலையில் முதன்முறையாக BCCI துணை தலைவர் ராஜிவ் சுக்லா விராட், ரோஹித் விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது? என வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

இதுகுறித்து அவர், ” எல்லோருக்கும் ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்துகிறேன். ரோஹித் மற்றும் கோலி இல்லாததை நாம் அனைவருமே உணர்கிறோம். ஆனால், ஓய்வு முடிவு என்பது அவர்களாகவே எடுத்தது. எந்தவொரு வீரரையும் ஓய்வுபெறுமாறு கூறக்கூடாது என்பது தான் BCCIயின் கொள்கை.

அவர்கள் தாங்களாகவே ஓய்வு பெற்றுவிட்டார்கள். இருவரும் சிறந்த பேட்ஸ்மேன்கள். அவர்களை நாங்கள் மிஸ் பண்ணுவோம். அதேசமயம் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், அவர்கள் இன்னும் ஒருநாள் போட்டியில் இருக்கிறார்கள்,” இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

இந்தியா அடுத்து அக்டோபரில் நடைபெறும் ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. இதில் இருவரும் விளையாட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. அதற்கு இன்னும் 3 மாதங்கள் இருப்பதால், அதற்கு நடுவே என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news