Sunday, December 7, 2025

டிசம்பர் 6 Target செய்யப்பட்டதா? நாட்டையே சின்னாபின்னமாக்க போடப்பட்ட பிளான்

டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், வரும் டிசம்பர் 6ஆம் தேதி நாட்டின் பல முக்கிய நகரங்களில் ஒரே நேரத்தில் பெரும் பயங்கரத் தாக்குதலை நடத்தும் திட்டம் தீட்டப்பட்டிருந்தது என தேசிய புலனாய்வு முகமை அதாவது NIA அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரை வெடிக்கச் செய்தவர் மருத்துவர் முகமது உமர் நபி என்பது, டிஎன்ஏ பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த பிற மருத்துவர்களையும் அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலில் இந்த வழக்கை டெல்லி போலீசார் விசாரித்தனர். ஆனால், இதில் பயங்கரவாத தொடர்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால், உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவின் பேரில் வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.

விசாரணையில் கிடைத்த தகவலின்படி, பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ஆம் தேதி டெல்லியின் பல பகுதிகளில் தொடர் வெடிகுண்டு தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஹரியானாவில் 3,000 கிலோ வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ‘இனி தப்ப முடியாது’ என்ற எண்ணத்தில் உமர் நபி டெல்லியிலேயே முன்னதாக தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலுக்காக 32 கார்களில் வெடிபொருட்கள் நிரப்பி, மக்கள் கூடும் இடங்களில் வெடிக்கச் செய்ய திட்டமிட்டிருந்ததும், உமர் பயன்படுத்திய ஃபோர்ட் ஈகோ ஸ்போர்ட் மற்றும் பிரெஸ்ஸா கார்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News