மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
இதன் தாக்கத்தால் கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக எல்லைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழை மேலும் தீவிரமடையும் என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் 11 முதல் 20 சென்டிமீட்டர் வரை மிகக் கனமழை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மலைப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
