உலகிலேயே பெண்கள் மட்டுமே வசித்துவரும் ஒரு கிராமம் தென்னாப்பிரிக்காவில் உள்ளது.
அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ள அந்தக் கிராமம் ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள கென்யா நாட்டில் உள்ளது. அங்குள்ள சம்புரு மாகாணத்தில் உமோஜா என்னும் சிற்றூரில் பெண்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். அந்தக் கிராமத்தில் ஆண்கள் வசிப்பதற்கு அனுமதியில்லை.
கடந்த காலத்தில் ஆண்களின் துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை, குழந்தைத் திருமணம் போன்ற பாதிப்புகளுக்குள்ளான பெண்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒரு முடிவெடுத்தனர். அந்த முடிவின்படி, அவர்கள் ஆண்களைத் தங்கள் வாழ்நாளில் பார்க்க விரும்பாமல் தங்களுக்கென தனி. ஊரை உருவாக்குதென்று தீர்மானித்தனர்.
அந்தத் தீர்மானத்தால் உருவானதுதான் உமோஜா கிராமம். ஆண்களின் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளான பெண்கள் ஒன்றுசேர்ந்து இந்தக் கிராமத்தில் மாட்டுச்சாணம், மண் கலந்து குடிசைகளைக் கட்டியுள்ளனர்.
பாதுகாப்புக்காக தங்கள் கிராமத்தைச் சுற்றி முள்வேலிகள் அமைத்துள்ளனர். ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் மட்டுமே இங்கு வசித்து வருகின்றனர்.
இந்தக் கிராமத்தில் ஓர் ஆரம்பப் பள்ளியையும் அவர்கள் நடத்தி வருகின்றனர்.
வருமானத்துக்காக நகைகளை உற்பத்தி செய்துவருகின்றனர் அந்தக் கிராமத்தில் வசித்துவரும் பெண்கள். தற்போது போதிய வருமானத்தோடு ஆண்களின் தொல்லை, இடையூறு, கொடுமை ஏதுமின்றி மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் வாழ்ந்து வருகின்றனர். மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கான கலாச்சார மையத்தையும் நடத்திவருகின்றனர்.
சிறுவயதிலிருந்தே இவ்வூரில் வளர்க்கப்படும் ஆண்கள் மட்டுமே இந்தக் கிராமத்தில் தங்கலாம். வெளியிடங்களிலிருந்து வரும் ஆண்கள் இவ்வூரைப் பார்த்துவிட்டுச் செல்ல அனுமதி உண்டு. ஆனால், தங்குவதற்கு அனுமதியில்லை.
தொல்லைக்கும் கொடுமைக்கும் முடிவுகட்டிவிட்டனர் உமோஜா கிராமப் பெண்கள்.