புதுக்கோட்டையில், விசிக தலைவர் திருமாவளவன் முன்னிலையில் நிர்வாகிகள் மோதிக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டையில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற திருமாவளவனை, மாவட்ட செயலாளருக்கு தெரியப்படுத்தாமல், தனி நபர் ஒருவரின் கடைக்கு நகர செயலாளர் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. போதிய பாதுகாப்பு இல்லாமலும், நிர்வாகிகளுக்கு தெரியாமலும் திருமாவளவனை எப்படி அழைத்துச் செல்லலாம் என்று, விசிக கட்சி நிர்வாகிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் திருமாவளவன் முன்னிலையிலே இரு தரப்பும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தாக்கி மோதிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமாவளவன் சென்ற கடையின் உரிமையாளர் மீது நில மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.
