சமூக வலைதளங்களில் வரும் ஏதோ ஒரு விளம்பரத்தையோ அல்லது தெரியாத ஒரு லிங்க்கையோ கிளிக் செய்தவுடன் உங்கள் செல்போன் திடீரென இயங்காமல் நின்றுவிடுகிறதா? ஸ்கிரீன் அப்படியே ‘ப்ரீஸ்’ ஆகிவிட்டதா? இது வெறும் தொழில்நுட்பக் கோளாறு என்று நினைத்து அலட்சியமாக இருந்துவிடாதீர்கள்.
இப்போது சைபர் கொள்ளையர்கள் உங்களை ஏமாற்ற ‘ப்ரோசன் ஸ்கிரீன் ஸ்கேம்’ (Frozen Screen Scam) என்ற புதிய ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளனர். உங்கள் போன் ஹேங் ஆகும்போது ஏற்படும் பதற்றத்தைப் பயன்படுத்தி, உங்களை வங்கி அதிகாரிகளாகவோ அல்லது கஸ்டமர் கேர் ஊழியர்களாகவோ அழைத்து ஏமாற்றுவதே இவர்களின் வேலை.
இந்த மோசடி வெறும் பிஷிங் முறையோடு நின்றுவிடுவதில்லை. உங்கள் போனில் உள்ள கோளாறைச் சரி செய்கிறோம் என்று கூறி, ஒரு போலியான செயலியை (APK) பதிவிறக்கம் செய்யச் சொல்வார்கள்.
அந்தச் செயலியை நீங்கள் இன்ஸ்டால் செய்தவுடன், உங்களின் நோட்டிபிகேஷன், மெசேஜ்கள் மற்றும் ஆக்சசிபிலிட்டி பெர்மிஷன்களைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் உங்கள் போனைத் தங்கள் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடுவார்கள்.
குறிப்பாக, உங்களின் ரகசிய ஓடிபி (OTP) எண்களை உங்களது கவனத்திற்கு வராமலேயே படித்து, உங்களின் யூபிஐ (UPI) கணக்கிலிருந்து பணத்தை அப்படியே கபளீகரம் செய்துவிடுவார்கள்.
இந்தத் தாக்குதலின் மிக மோசமான பகுதி என்னவென்றால், உங்களின் யூபிஐ பின் (UPI PIN) எண்ணை நீங்களே உள்ளிடும் வகையில் உங்களை அவர்கள் மூளைச்சலவை செய்வார்கள்.
அல்லது ஸ்கிரீன் ஷேரிங் ஆப் மூலம் நீங்கள் அழுத்தும் எண்களை அவர்கள் நேரலையாகக் கண்காணிப்பார்கள். இப்படித் திருடப்படும் பணம், உங்களின் அனுமதியோடு நடந்த ஒரு சாதாரணப் பரிவர்த்தனை போலவே தோன்றும். இதனால் இழந்த பணத்தை மீட்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிடுகிறது.
ஒருவேளை உங்கள் போன் ஸ்கிரீன் இப்படி மர்மமான முறையில் முடங்கிவிட்டால், முதலில் பதற்றமடையாதீர்கள். உடனடியாக மொபைல் டேட்டா மற்றும் வைஃபை (Wi-Fi) இணைப்பைத் துண்டித்துவிடுங்கள்.
முன்பின் தெரியாத நபர்கள் சொல்லும் எந்த ஒரு செயலியையும் பதிவிறக்கம் செய்யாதீர்கள். உங்களின் வங்கியிலிருந்து பேசுவதாக யாராவது அழைத்து போனை ரிமோட் ஆக்சஸ் செய்யச் சொன்னால், அதை ஒருபோதும் ஏற்காதீர்கள்.
உங்கள் வங்கி கணக்கில் ஏதேனும் முறைகேடு நடந்ததாகச் சந்தேகம் வந்தால், உடனடியாக ‘1930’ என்ற சைபர் கிரைம் உதவி எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கவும். உங்களின் விழிப்புணர்வு மட்டுமே உங்களது கடின உழைப்பின் பலனைப் பாதுகாக்கும்!
