உலக நாடுகளை நம்பி உக்ரைன் ஏமாந்துபோன
தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது உக்ரைனும் ரஷ்யாவும் தனித்தனி நாடுகளாக
இருந்தாலும் பல ஆண்டுகளுக்கு முன்புவரை ஒரே தாய்
வயிற்றுப் பிள்ளைகளாகத்தான் இருந்தன USSR என்ற பெயரில்.
அதாவது, UNIION OF SOVIET SOCIALIST REPUBLICS என்ற
பெயரில் ரஷ்யா, உக்ரைன், ஜார்ஜியா, பெலாருஷியா,
உஸ்பெகிஸ்தான், ஆர்மீனியா, அஜர்பைஜான், கஜகஸ்தான்,
கிர்கிஸ்தான், துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும்
லாட்வியா உள்பட 15 குடியரசுகளை உள்ளடக்கி இருந்தது.
சோவியத் ஒன்றியத்தின் அங்கமாக உக்ரைன் இருந்தபோது
அந்த மாகாணத்தில் 1700 அணு ஆயுதங்கள் நிலைநிறுத்தப்
பட்டிருந்தன. இது அப்போதைய சோவியத் ஒன்றியத்தின்
அணு ஆயுதங்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு
எண்ணிக்கை.
1991 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சோவியத் ஒன்றியம்
சிதைந்தது. 15 சோவியத் குடியரசுகளும் தனித்தனி நாடுகளாக
உருவெடுத்தன. தனிநாடாக விளங்கிய உக்ரைன் அப்போதைய
நிலவரப்படி, அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தபடி அதிக
எண்ணிக்கையிலான அணு ஆயுதங்களைக்கொண்டிருந்தது.
அப்போது உக்ரைன், பெலாரஸ், கஜகஸ்தான் என்று அனைத்து
முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் அங்கங்களும் கடுமையான
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தன. அத்துடன்
விலைவாசி உயர்வும் விண்ணைத் தொட்டு கடும் பாதிப்புக்கு
உள்ளாகின.
இந்த நிலையில் அந்த நாடுகளுக்கு உதவ அமெரிக்கா, ரஷ்யா,
பிரிட்டன் ஆகிய மூன்று நாடுகளும் முன்வந்தன. அதேசமயம்
உதவிசெய்வதற்கு ஒரு நிபந்தனை விதித்தன அந்த நாடுகள்.
அதாவது, உக்ரைனில் உள்ள அனைத்து அணுஆயுதங்களும்
அழிக்கப்படவேண்டும் என்பதே அந்த நிபந்தனை.
இதற்கு உக்ரைன் உள்ளிட்ட அந்த 3 நாடுகளும் ஒப்புக்கொண்டன.
அதன்படி, அனைத்து அணுகுண்டுகளும் ஆயுதங்களும் ரஷ்யாவுக்கு
எடுத்துச்செல்லப்பட்டு செயல் இழக்கச்செய்யப்பட்டன. அதற்கான
செலவு அனைத்தையும் அமெரிக்கா ஏற்றுக்கொண்டது.
அதற்குப் பிரதிபலனாக, பிற்காலத்தில் உக்ரைன், பெலாரஸ்,
கஜகஸ்தான் நாடுகளைப் பாதுகாக்கும் பொறுப்பை அமெரிக்கா,
பிரிட்டன், ரஷ்யா ஆகிய 3 நாடுகளும் ஏற்றுக்கொண்டன. அதற்கான
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இதற்கான ஒப்பந்தம் ஹங்கேரி நாட்டின் தலைநகர் புத்தபெஸ்டில்
1994 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 5 ஆம் தேதியில் பாதுகாப்பு உறுதி
ஒப்பந்தம் ஏற்பட்டது.
ஆனால், ரஷ்யா அந்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன்மீது படையெடுத்து
உள்ளது. ஒப்பந்தத்தில் கூறியுள்ளபடி, உக்ரைனைப் பாதுகாக்க
வேண்டிய அமெரிக்காவும் பிரிட்டனும் வேடிக்கைதான் பார்த்துக்
கொண்டிருக்கின்றன.
அணுஆயுதங்களைப் பயன்படுத்தத் தயார் நிலையில் இருக்கும்படி
ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ள நிலையில்,
அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாகியுள்ளது
உக்ரைனின் நிலை.
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம் என்பது
நம் ஊர்ப் பழமொழி.
ஐயோ பாவம் உக்ரைன்.