துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட அதானி! மரணத்தை அருகில் காட்டிய அந்த  2 தருணங்கள்

188
Advertisement

அதானியின் வர்த்தகத்தை புரட்டிப்போட்ட ஹிண்டன்பர்க் அறிக்கை, தொடர்ந்து  தலைப்பு செய்திகளை தன்வசம் வைத்துள்ளது. ஆனால் அதானி நூலிழையில் உயிர் தப்பிய இரண்டு தருணங்களை பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

1998ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் தேதி அஹமதாபாத்தின் பிரபலமான கர்ணாவதி கிளப்பிற்கு சென்று திரும்புகையில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார் அதானி. வியாழக்கிழமை கடத்தப்பட்ட அதானி, சனிக்கிழமையன்று பத்திரமாக வீடு வந்து சேர்ந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக அஹமதாபாத்தில் உள்ள சர்கேஜ் காவல் நிலையத்தில் FIR பதிவு செய்யப்பட்ட நிலையில், கடத்தலின் பின்னணியில் நிழலுக தாதா தாவூத் இப்ராஹிமிடம் பணிபுரிந்து, பின் பிரிந்த உத்திரப் பிரதேசத்தின் பிரபல குற்றவாளியான பப்லு ஸ்ரீவஸ்தவா இருப்பது தெரிய வந்தது. 1995ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட ஸ்ரீவஸ்தவா, சிறையில் இருந்தபடியே தனது கும்பலை நடத்தி 15க்கும் மேற்பட்ட கோடீஸ்வர தொழிலதிபர்களின் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டுள்ளார்.

கடத்தப்பட்ட அதானியை விடுவிக்க 15 கோடி பிணைத் தொகையாக கேட்கப்பட்ட நிலையில், கடத்தல்காரர்களுக்கு பணம் கிடைத்ததா உள்ளிட்ட விவரங்கள் மர்மமாகவே இருக்கின்றன.  2009ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, கடத்தல்காரர்களை அடையாளம் காட்ட முயற்சி எடுக்காத அதானி சாட்சியம் அளிக்கவும் வரவில்லை.

சாட்சியம் இல்லாத காரணத்தால் வழக்கின் முக்கியக் குற்றவாளிகளை 2018ஆம் ஆண்டு நீதிமன்றம் விடுவித்தது. இது மட்டுமில்லாமல் 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி, நாட்டையே உலுக்கிய தாஜ் ஹோட்டல் தீவிரவாத தாக்குதல் நடக்கும் போதும், அதானி தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்த போதும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.