அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகள் மீதும் வரிகளை அள்ளி வீசியிருக்கிறார். இதனால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் உலக நாடுகள் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளன. இதற்கிடையே புதிய திருப்பமாக அமெரிக்கா தான் வசூலித்த வரிகளில் சுமார் 50% வரிகளைத் திரும்பச் செலுத்தும் சூழல் வரலாம் என டிரம்ப் தரப்பு கூறியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வாங்கும் உலக நாடுகள் மீது தான்தோன்றித்தனமாக வரிகளை விதித்திருக்கிறார். விதிவிலக்கில்லாமல் இந்தியாவுக்கும் கூட இப்படித் தான் 50% வரி விதிக்கப்பட்டது.
இதற்கிடையே அமெரிக்கக் கருவூலத் துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் உலக நாடுகள் மீது விதிக்கப்பட்ட வரிகளில் சுமார் 50%ஐ திருப்பித் தரும் சூழலுக்கு அமெரிக்கா தள்ளப்படலாம் என தெரிவித்துள்ளார். அதாவது அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் வரிகள் தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. அதில் எதிர்மறையான தீர்ப்பு வந்தால் அமெரிக்கா வரிகளை ரீஃபண்ட் செய்ய வேண்டி இருக்கும் என அவர் குறிப்பிட்டிருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது அமெரிக்க உச்ச நீதிமன்றம் டிரம்ப் நிர்வாகம் விதித்த வரிகளை ரத்து செய்தால், அமெரிக்கா அந்த நாடுகளுக்கு ரீபண்ட் வழங்க வேண்டி இருக்கும் என ஸ்காட் பெசென்ட் தெரிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், ‘ஒருவேளை சுப்ரீம் கோர்ட் இதுபோல தீர்ப்பளித்துவிட்டால் சுமார் 50% வரிகளுக்கு நாங்கள் பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டியிருக்கும். இது அமெரிக்கக் கருவூலத்திற்கு மிகவும் மோசமானதாக இருக்கும். ஆனால், நீதிமன்றம் அதைச் சொன்னால் நாங்கள் செய்தாக வேண்டும்’ என்று கூறியிருப்பது பரபரப்பை பற்றவைத்துள்ளது.
மேலும் வரி விவகாரத்தில் பல மாற்று வழிகள் இருப்பதாகக் பெசென்ட் குறிப்பிட்டார். இருப்பினும் சுப்ரீம் கோர்ட், எதிரான தீர்ப்பைக் கொடுத்தால் அது டிரம்ப்பின் பேச்சுவார்த்தை நிலைப்பாட்டை பலவீனப்படுத்தும் என்று குறிப்பிட்டிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.