நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்ஹாங், ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஓமன் என்று, மொத்தம் 8 நாடுகள் பங்கு பெறுகின்றன.
தற்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக, பாகிஸ்தான் உள்துறை மந்திரி Mohsin Naqvi இருக்கிறார். இந்தநிலையில் அண்மையில் ஏற்பட்ட இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக, ஆசிய கோப்பை தொடரை இந்தியா புறக்கணிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த தொடர் நடைபெறும் பட்சத்தில் கிடைக்கும் Sponsor தொகையை, 8 நாடுகளும் பிரித்துக் கொள்ளும். அந்தவகையில் பாகிஸ்தானுக்கு இந்த தொடரினால், 220 கோடி ரூபாய் வரை பங்குத்தொகையாக கிடைக்கும்.
ஒருவேளை இந்த தொடரை இந்தியா புறக்கணித்தால் அதற்குப்பிறகு, பாகிஸ்தானில் கிரிக்கெட் வாரியம் என்ற ஒன்றே இருக்காது. ஏனெனில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்தியா, துபாய் சென்று விளையாடியதால் ரூபாய் 800 கோடிக்கும், அதிகமான தொகையை பாகிஸ்தான் இழந்தது.
இந்த அடியில் இருந்தே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்னும் மீளவில்லை. தற்போது ஆசிய தொடரையும் இந்தியா புறக்கணித்தால் ஸ்பான்ஸர்ஷிப்கள் கிடைக்காது. அத்தோடு இந்தியாவை பகைத்துக் கொள்ளும் துணிச்சல் இல்லாததால், பிற நாடுகளும் இதில் பங்கு பெறாது.
எனவே இதுதொடர்பாக இந்தியாவுடன், பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. ஒருவேளை பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு வந்தால், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருக்கும் Mohsin Naqviஐ நீக்க வேண்டும், புதிய தலைவராக இலங்கை அல்லது வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவரை நியமிக்க வேண்டும் என்று, BCCI வலியுறுத்திட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
தற்போது BCCI இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான வீரர்கள் தேர்வு, IPL இறுதிப்போட்டிகள் என்று பிஸியாக இருக்கிறது. எனவே இந்த தலைவலி எல்லாம் தீர்ந்த பிறகுதான் ஆசிய கோப்பை தொடரின் பக்கம் BCCIயின் கவனம் திரும்பும். அதுவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஒருவித ‘திக் திக்’ மனநிலையோடு காத்திருக்க வேண்டியது தான்!