வலுக்கும் உட்கட்சி மோதல்! தமிழக காங்கிரசின் அடுத்த தலைவர் இவர்தானா?

282
Advertisement

புதிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரை நியமிக்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநில கட்சித்தலைமையை மாற்றுவது வழக்கம்.

ஆனால், தற்போதைய தலைவர் கே.எஸ்.அழகிரி பதவியேற்று நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் புதிய தலைவர் நியமிக்கபடாதது கட்சியினரிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

டெல்லி தலைமையுடன் நெருக்கம், லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் இவரது தலைமையின் கீழ் கிடைத்த கணிசமான வெற்றி மற்றும் திமுக போன்ற கூட்டணி கட்சிகளுடன் இணக்கமாக செயல்படுவது போன்ற காரணங்களால் கட்சித்தலைமையிடம் இவர் பெற்றிருந்த நற்பெயர் தற்போது வலுக்கும் உட்க்கட்சி மோதலால் சிதைந்து வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை கைப்பற்ற காங்கிரசின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசு, எம்.பி.க்கள் செல்லக்குமார், டாக்டர் விஷ்ணுபிரசாத், கார்த்திசிதம்பரம், டாக்டர் ஜெயக்குமார், ஜோதிமணி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ. விஜயதாரணி, காங்கிரசின் பொருளாளர் ரூபி மனோகரன் ஆகியோர் முயற்சித்து வருகின்றனர்.

எப்படியாவது பதவியை தன்வசப்படுத்த காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான தினேஷ் குண்டு ராவ், மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கே.சி வேணுகோபால் ஆகியோரை தமிழக காங்கிரஸை சேர்ந்தவர்கள் சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய ராஜ்யசபா உறுப்பினருமான ப.சிதம்பரம் அவரின் மகன் கார்த்தி சிதம்பரத்தை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்க கோரி மல்லிகார்ஜுனா கார்கேவை சந்திக்க, அவர் முடிவேதும் சொல்லாமல்  ராகுல் காந்தி பக்கம் கை காட்டியுள்ளார். பாரத் ஜோடோ யாத்ராவில் பிசியாக இருக்கும் ராகுலை சந்திக்க முடியாததால் சோனியா காந்தியை சந்தித்துள்ளார் சிதம்பரம். கார்த்தி சிதம்பரத்தை தலைவராக நியமிக்க ராகுல் விரும்பவில்லை என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கடந்த 15ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற கூட்டத்தில் ரூபி மனோகரன் மற்றும் கே.எஸ்.அழகிரி தரப்பினரிடையே ஏற்பட்ட கடும் தள்ளுமுள்ளு கட்சியின் பரபரப்பான சூழலை வெளிப்படுத்தியுள்ளது. 

சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, கட்சி பொருளாளர் ரூபி மனோகரன், ராகுல் காந்தியின் அபிமான மக்களவை உறுப்பினர்கள் ஜோதிமணி மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோர் களத்தில் இருக்க கார்த்தி சிதம்பரம் பதவியை கைப்பற்றுவது சிரமம் தான் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.