‘அந்த 2 ஓவர்கள் தான் காரணம்’… புலம்பிய CSK கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 194 ரன்கள் சேர்த்தது. 195 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய சிஎஸ்கே, தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி பவர்பிளேயில் 3 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து 10 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்திருந்த நிலையில், வெற்றி பெற 60 பந்துகளில் 84 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது சர்பராஸ் கான் மற்றும் டெவால்டு பிரேவிஸ் களத்தில் இருந்தனர். ஆனால் 11வது ஓவரில் எசான் மலிங்கா 1 ரன் மட்டும் விட்டுக்கொடுத்து சர்பராஸ் கானை அவுட் செய்தார். அடுத்த ஓவரில் ஷிவாங் குமார் 3 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து டெவால்டு பிரேவிஸை வெளியேற்றினார்.

இந்த இரண்டு ஓவர்கள் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. இதன் பின்னர் சிஎஸ்கே ரன் வேகம் குறைந்து, 184 ரன்களில் முடங்கி தோல்வியை சந்தித்தது. போட்டிக்குப் பிறகு சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில், எதிரணியின் பவர்பிளே ஆட்டத்தை பார்த்தபோது 220-230 ரன்கள் வரும் என எதிர்பார்த்ததாக தெரிவித்தார். ஆனால் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு அதை 194 ரன்களாக கட்டுப்படுத்தியதாக பாராட்டினார்.

10 ஓவர்களுக்கு பிறகு நிலைமை சாதகமாக இருந்தாலும், அடுத்த இரண்டு ஓவர்களில் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்தது போட்டியின் போக்கை மாற்றிவிட்டதாக கூறினார். மேலும், கடைசி ஓவர்களில் அதிக ரன் தேவைப்பட்டதால் அழுத்தம் அதிகரித்தது என்றும், ஐதராபாத் அணி டெத் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசியதாகவும் பாராட்டினார். அவரது கருத்துப்படி, அந்த முக்கிய தருணங்களில் ஏற்பட்ட பின்னடைவே சிஎஸ்கே தோல்விக்கு காரணமாக அமைந்தது.

Related News

Latest News