மன்னார்குடி அருகே காதலிக்க மறுத்த இளம்பெண்ணை வீடு புகுந்து இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கோட்டூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகள் வசந்த பிரியா. இவர் மன்னார்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கும் மணிகண்டனின் அக்கா மகன் மகாதேவன் ஆகிய இருவரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மகாதேவனின் நடவடிக்கை பிடிக்காததால், அவரை திருமணம் செய்துக்கொள்ள வசந்த பிரியா மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து வீட்டில் தனியாக இருந்த வசந்த பிரியாவிடம் மகாதேவன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், வசந்த பிரியாவின் கழுத்து, கை ஆகிய இடங்களில் குத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் துடித்த வசந்த பிரியாவை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.