தங்கத்தால் செய்யப்பட்ட வடா பாவ் அனைவரையும் கவர்ந்துவருகிறது.
தங்கப் பிரியாணி, தங்கப் பர்கர் வரிசையில் தற்போது
தங்கத்தால் செய்யப்பட்ட வடா பாவ் ஒன்று துபாயில் பிரபலமாகி வருகிறது.
இங்குள்ள கராமா என்னும் பகுதியில் ஓபாவோ என்னும்
இந்திய ஓட்டலில் இந்த தங்க வடா பாவ் செய்யப்பட்டுள்ளது.
இந்த தங்க முலாம் பூசப்பட்ட வடா பாவ்
ஒரு அழகான மரப்பெட்டியில் வைத்துப் பரிமாறப்படுகிறது.
பாலாடைக் கட்டியுடன் இறக்குமதி செய்யப்பட்ட வெண்ணெய்,
வீட்டில் செய்யப்பட்ட ரொட்டி, புதினாக்கூட்டு ஆகியவை சேர்த்து
வேகவைக்கப்படும் இந்த வடா பாவில் நிறைவாக
பிரான்ஸிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 22 கேரட்
தங்க முலாம் பூசப்பட்டு சாப்பிடத் தருகிறார்கள்.
இந்த தங்க வடா பாவ் ஒன்றின் விலை
இந்திய மதிப்பில் 2 ஆயிரம் ரூபாய்.
மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் பிரபலமான
நொறுங்குத் தீனி வடா பாவ். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை
அனைவரும் விரும்பி சாப்பிடும் சைவப் பண்டமாகும்.
இதில் உருளைக்கிழங்கு பிரதானமாக இருக்கும்.
கூடவே எண்ணெயில் வறுத்த பச்சை மிளகாயை சேர்த்து
சாப்பிடுவது வழக்கமாக உள்ளது.
இந்த மாநிலங்களில் சாலையோரம் முதல் நட்சத்திர
விடுதிகள் வரை இந்த சிற்றுண்டி மிகப்பிரபலம்.
பிரட், பட்டர், தக்காளி சாஸ், இனிப்புச் சட்னி, ரெடிமேடு
பஜ்ஜி மாவு, சிறிதளவு மக்காச்சோள மாவு, வேகவைத்த
உருளைக்கிழங்கு, பட்டாணி, வெங்காயம், மஞ்சள்பொடி
கலந்து செய்யப்படும் சுவை மிகுந்த இந்த உணவுப் பண்டம்
தங்க முலாம் பூசப்பட்டு செய்யப்பட்டிருப்பது அனைவரின்
கவனத்தையும் ஈர்த்துவருகிறது.