105 வயதில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை புரிந்திருக்கிறார் ஒரு பெண்மணி.
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் 2021 ஆம் ஆண்டு, நவம்பர் 14 ஆம் தேதி மூத்த குடிமக்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இதில் 105 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள மூதாட்டிகள் கலந்துகொண்டனர்.
இப்போட்டியில் கலந்துகொண்டு 105 வயதாகும் மூதாட்டி ஜுலியா 1 நிமிடம் 2 விநாடி, 95 மணித்துளிகளில் இலக்கை அடைந்து மகத்தான சாதனை படைத்திருக்கிறார். ஆனால் இதில் திருப்தியடையாத ஜுலியா, இன்னும் என்னால் வேகமாக ஓடியிருக்க முடியும் என்று சோகமாகக் கூறி, இளைய தலைமுறைக்கு உத்வேகம் அளித்துள்ளார்.
ஓய்வுபெற்ற ஆசிரியரான ஜுலியா தனது 80 ஆவது வயதிலிருந்தே மூத்த குடிமக்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். அப்போது சைக்கிள் ஓட்டும் போட்டிகளில் வென்று பல தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் ஜுலியானா.
அவருக்கு 100 வயதாகும்போது தன்னோடு போட்டியில் பங்கேற்க யாரும் இல்லாததால், சைக்கிள் ஓட்டும் போட்டியிலிருந்து விலகிவிட்டார்.
”என்னால் முடிந்தவரை ஓடிக்கொண்டே இருக்க விரும்புகிறேன், மற்றவர்களுக்கு ஓர் உத்வேகமாக இருக்க விரும்புகிறேன். உங்களுக்கு வயதாகும்போது நீங்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டுமானால் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்” என்பதே வீராங்கனை ஜுலியாவின் அறிவுரை.
கேட்டுச்சா பாட்டீஸ்……?