மயக்க மருந்துக்குப் பதிலாக சினிமா பாடல் பாடிய பெண்

367
Advertisement

அறுவை சிகிச்சையின்போது மயக்க மருந்துக்குப் பதிலாக சினிமா பாடல் பாடிய பாடலைப் புற்றுநோயாளி ஒருவர் பாடி அசத்தியுள்ளார்.

அறுவை சிகிச்சையின்போது வலிதெரியாமல் இருப்பதற்காக நோயாளிக்கு மருத்துவர்கள் மயக்கமருந்து கொடுப்பது வழக்கம் என்பது தெரிந்ததுதான். ஆனால், மயக்க மருந்துக்குப் பதிலாக இளையராஜா பாடிய பாடலைப் பாடிய நோயாளியின் செயல் மருத்துவ உலகத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி. கர்நாட இசைப்பாடகியான இவர் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சைசெய்துகொள்ள முடிவுசெய்யப்பட்டது.

இவரைப் பரிசோதித்த மயக்கவியல் நிபுணர்கள், மயக்க மருந்து கொடுக்க இயலாத சூழல் இருப்பதைத் தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து, அறுவைச் சிகிச்சையின்போது பாடல் பாடும்படி கூறியுள்ளனர்.

அவர்களின் யோசனையை ஏற்றுக்கொண்ட சீதாலட்சுமி, 1990 ஆம் ஆண்டில், வசந்த இயக்கிய கேளடி கண்மணி படத்தில் பாடலாசிரியர் மு. மேத்தா எழுதி, இளையராஜா ,இசையமைப்பில் பி. சுசீலா பாடிய கற்பூரப் பொம்மை ஒன்று என்ற பாடலைப் பாடத் தொடங்கினார்.

மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்யத் தொடங்கி வெற்றிகரமாக நிறைவுசெய்தனர். பிறகு, வீடு திரும்பினார் சீதாலட்சுமி.

இந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இளையராஜாவை சீதாலட்சுமியின் வீட்டுக்கு அழைத்துவந்து சந்திக்க வைத்துள்ளது. இளையராஜா நேரில்வந்து வாழ்த்தியதால், மேலும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார் சீதாலட்சுமி.

தற்போது புற்றுநோய் பாதிப்பு குறைந்து மகிழ்ச்சியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார் சீதாலட்சுமி.

இசைக்கு மயங்காத இதயம் உண்டோ?