Wednesday, December 11, 2024

கடலுக்குள் புதைந்த உலகின் எட்டாவது கண்டம்! நீடிக்கும் மர்ம ரகசியங்கள்…

நாம் நீண்ட காலமாக நம்பி வரும் அடிப்படை கட்டமைப்புகளை உடைக்க அறிவியலும் கூட சமயங்களில், போராட வேண்டியுள்ளது. 

அதே போலத்தான், உலகின் எட்டாவது கண்டம் பற்றிய பல ஆராய்ச்சி அறிக்கைகள் வெளிவந்த பின்னரும் ஏழு கண்டங்களை பற்றிய தகவல்களே அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஏபெல் டாஸ்மேன் (Abel Tasman) என்ற டச்சு மாலுமி, 1642ஆம் ஆண்டு உலகின் எட்டாவது கண்டத்தை தேடும் பணியை தொடங்கினார். ஐரோப்பாவின் தெற்கு அரைக்கோளப் பகுதியை ஆராய்ந்து வந்த அவர், பின்னர் கிழக்கு திசை நோக்கி பயணித்து நியூசிலாந்தை வந்தடைந்தார்.

அங்கிருந்த மவோரி பழங்குடியனரிடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக, அந்த இடத்திற்கு கொலைகாரர்கள் என அர்த்தம் கொள்ளும் வகையில் மூர்டேனர்ஸ் என பெயரிட்டு வெளியேறினார் ஏபெல்.

டாஸ்மேன் நியூசிலாந்தை கண்டுபிடித்து ஒரு நூற்றாண்டுக்கு பின், ரகசிய கண்டத்தை கண்டுபிடிக்கும் பணிக்காக அனுப்பப்பட்டவர் பிரிட்டிஷ் வரைப்பட தயாரிப்பாளர் ஜேம்ஸ் குக்.

அவரது ஆய்வுகள், ஸீலாண்டியா பற்றிய ஆராய்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தாலும், வலுவான தகவல்களை 1895ஆம் ஆண்டு தொகுத்து வழங்கியவர் இயற்கை ஆர்வலரான ஜேம்ஸ் ஹெக்டர் ஆவார்.

தொடர்ச்சியான மலைகளை கொண்டு நீருக்குள் மூழ்கியுள்ள கண்டத்தை பற்றி ஜேம்ஸ் அறிவித்தாலும், ஸீலாண்டியாவை பற்றி ஆய்வு மேற்கொள்வது வீண் செலவு என நாடுகள் கருதின. இந்நிலையில், 1995ஆம் ஆண்டு ப்ருஸ் லூயென்டிக்  ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட பகுதியை  ஸீலான்டியா என வரையறுத்தார்.

அதே நேரத்தில் அறிமுகமான,  “கடல் சட்டத்தின் மீதான ஐக்கிய நாடுகள் உடன்பாடு” என்ற சட்டத்தால் நியூசிலாந்து, ஸீலாண்ட்டியா மீதான ஆராய்ச்சியை முடுக்கிவிட்டது.

காரணம், இந்த சட்டத்தின் படி நாடுகள் தங்கள் கரையில் இருந்து  200 கடல் மைல்கள் தொலைவு வரை எல்லையை விரிவுபடுத்திக்கொள்ளலாம் என்பதே. இதன்படி, நியூசிலாந்து ஸீலாண்டியாவின் ஒரு பகுதி என நிரூபித்தால், தனது எல்லையை ஆறு மடங்கு வரை பெரிதாக்கலாம் என்பதே.

செயற்கைக்கோள் தரவுகளில் இருந்து ஸீலாண்டியா ஆஸ்திரேலியாவை விட அதிக பரப்பளவு கொண்டுள்ளது தெரியவந்தது. 55 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான கோண்ட்வானா என்ற பெருங் கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது ஸீலாண்டியா.

சுமார் 10.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக கோண்ட்வானா கண்டம் ஆஸ்திரேலியா, அண்டார்டிகா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, மடகாஸ்கர்,அரேபியத் தீபகற்பம், இந்தியத் துணைக் கண்டம், ஸீலாண்டியாஎன தனித்தனியே பிரிந்தபோது, ஸீலாண்டியா அதிகமாக இழுக்கப்பட்டதாகவும் அந்த அழுத்தத்தினாலேயே அதன் பெரும்பகுதி கடலுக்குள் மூழ்கிவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, 2017ஆம் ஆண்டில் புதிய கண்டம் கண்டுபிடிக்கப்பட்டதாக பெரும்பான்மை புவியிலாளர்கள் ஒப்புக்கொண்டனர். 49 லட்சம் சதுர கிலோமீட்டர் கொண்டதாக கருதப்படும் இக்கண்டத்தின் ரகசியங்கள் கடலுக்கு 6,560 அடிக்கு கீழே உலவிக் கொண்டுள்ளன.

கோண்ட்வானா கண்டம் பிரிய மொத்தம் 13 கோடி ஆண்டுகள் ஆனதாக கூறப்படும் நிலையில், அப்போது ஸீலான்டியா கடலுக்கு மேல் உள்ள கண்டமாக இருக்கும் பட்சத்தில் எத்தகைய உயிரினங்கள் வாழ்ந்திருக்கும் என்ற கேள்வி ஒருபுறம் எழும்ப, கோண்ட்வானாவில் இருந்து ஸீலான்டியா பிரிந்ததற்கு பிறகான காலத்தை சேர்ந்த டைனோசர் எச்சங்கள் தெற்கு அரைக்கோளப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது மர்மங்களை அதிகரிக்கும் வண்ணம் உள்ளது.

விநோதமாக வளைந்த உருவத்தை பெற்றிருக்கும் ஸீலான்டியாவில் டைனோசர்கள், யானைப் பறவைகள் போன்ற அழிந்து போன உயிரினங்கள் வாழ்ந்ததாக அனுமானிக்கப்படும் நிலையில், ஸீலாண்டியாவின்  புதைபடிவங்களை இன்னும் ஆராய்ச்சியாளர்கள் தேடிக்கொண்டு தான் உள்ளனர்.

400 வருடங்களுக்கு முன் ஏபெல் டாஸ்மேன் அவிழ்க்க தொடங்கிய ரகசியம், இன்னும் முடிவுக்கு வராத நீடிக்கும் மர்மமாகவே உள்ளது என கூறினால் மிகையாகாது.

Latest news
Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!