உலகின் பணக்காரக் கிராமம்!

390
Advertisement

குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்திலுள்ள மதாப்பர் என்னும்
கிராமம் வங்கிச் சேமிப்பு அடிப்படையில் உலகிலேயே
பணக்காரக் கிராமமாக உயர்ந்துள்ளது.

7 ஆயிரத்து 600 வீடுகள் உள்ள இந்தக் கிராமத்தில் 17 வங்கிகள்,
அனைவருக்கும் வங்கிக் கணக்குகள், வங்கியில் வைப்புத்
தொகை 5 ஆயிரம் கோடி என ஆச்சரியத்தில் மூழ்க வைத்துள்ளது.

சராசரியாக ஒவ்வொரு குடும்பமும் 65 லட்சம் வரை சேமித்து வைத்துள்ளது.
சில குடும்பங்கள் ஒரு கோடிக்கும் அதிகமான ரூபாயைக் கணக்கில்
சேமித்து வைத்துள்ளன.

உலகப் பொருளாதார வல்லுநர்களையே திரும்பிப் பார்க்க
வைத்துள்ள இந்தக் கிராமம் எப்படி இந்த நிலைக்கு
உயர்ந்தது தெரியுமா…?

காலங்காலமாக இந்தப் பகுதியிலுள்ளவர்கள் கட்டுமானப்
பணிகளைச் செய்துவந்தனர். அதனால் மேஸ்திரி ஆஃப் கட்ச் என்கிற
பெயர் இந்த மாவட்டத்துக்கே ஏற்பட்டது. ஓர் இனமாகவே மாறிவிட்ட
இப்பகுதி வாழ் மக்கள் சுற்றியுள்ள 18 கிராமங்களில் வசித்து வருகின்றனர்.
இதில் ஒரு கிராமம்தான் மதாப்பர்.

உள்ளூரில் மட்டுமே கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்த
இந்த சமூக மக்கள் தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து,
ஆப்ரிக்கா, கனடா உள்பட உலகின் பல நாடுகளுக்கும்
சென்று அங்கு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு கைநிறைய
சம்பாதித்து வருகிறார்கள்.

அங்கிருந்தபடியே தங்கள் சொந்த ஊரிலுள்ள வங்கிக்
கணக்கில் சேமிக்கத் தொடங்குகிறார்கள்.

சேமிப்பு உயர்ந்ததும் தங்கள் சொந்தக் கிராமத்துக்கு வந்து
சொந்தமாகக் கட்டுமான நிறுவனத்தைத் தொடங்கிக் கோடிக்
கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.

இந்தக் கிராமத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும்
ஒருவர் அல்லது இருவர் வெளிநாடுகளில் கட்டுமான வேலை
செய்துவருகின்றனர்.

இதுதவிர, முப்போகம் கோதுமை, அரிசி விளைச்சலால்
இக்கிராமம் விவசாயத்திலும் கொடிகட்டிப் பறக்கிறது.
இங்கு விளைவிக்கப்படும் கோதுமை மும்பை, டெல்லி
போன்ற பெரு நகரங்களுக்கு அனுப்பப்படுகிறது.

சம்பாதிப்பதில் காட்டும் ஆர்வத்தை சேமிப்பிலும் காட்டி
மதாப்பர் கிராமம் உலகுக்கே முன்னோடியாக விளங்குகிறது-