வரலாற்று சிறப்புமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற, 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி அதிர்ச்சி அளித்தது. முதல் இன்னிங்சை டிரா செய்த இந்திய அணி 2வது இன்னிங்சில் 193 ரன்களை எட்ட முடியாமல் சுருண்டது.
இந்திய அணியில் ஜடேஜா மட்டுமே தனியாளாக கடைசிவரை போராடினார். மற்ற பேட்ஸ்மேன்கள் களத்துக்கு வருவதும், போவதுமாக இருந்ததால் ஜடேஜாவுக்கு தேவையான பார்ட்னர்ஷிப் கிடைக்கவில்லை. ஏதாவது ஒரு பேட்ஸ்மேன் நிலைத்து நின்றிருந்தாலும் கூட இந்தியா போட்டியை வென்றிருக்கும். அது கடைசிவரை நடக்கவில்லை.
இந்தநிலையில் போட்டிக்கு பிறகு பேசிய இந்திய கேப்டன் சுப்மன் கில், ” முதல் இன்னிங்சில் ரிஷப் பண்டின் ரன் அவுட் மிகப்பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தி விட்டது. 5வது நாள் ஆட்டத்தில் பேட்டிங் செய்வது கடினம் என்று எங்களுக்கு தெரியும். முதலிலேயே நாங்கள் பெரிய ஸ்கோரை எட்டியிருக்க வேண்டும்.
ஜடேஜா மிக சிறப்பாக பேட்டிங் செய்தார். அவரின் போராட்ட குணம் பாராட்டத்தக்கது. ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால் நாங்கள் நிச்சயம் வெற்றி பெற்று இருப்போம்,” இவ்வாறு பேசியிருக்கிறார். 2 இன்னிங்சிலும் சேர்த்து கேப்டன் கில் மொத்தமாக 22 ரன்கள் தான் அடித்திருந்தார். அதே நேரம் துணை கேப்டன் ரிஷப் பண்ட் 83 ரன்கள் எடுத்துள்ளார்.
தோல்விக்கான மொத்த பழியையும், ரிஷப் பண்ட் மேல் தூக்கி போட்டுவிட்டு கேப்டன் கில் எஸ்கேப் ஆகியிருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள், ” பர்ஸ்ட் நீங்க ஒழுங்கா பேட்டிங் பண்ணுங்க. பிளாட் பிட்ச்ல மட்டும் ரன் அடிக்குற நீங்க இதைப்பத்தி எல்லாம் பேசலாமா?,” இவ்வாறு விதவிதமாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.