https://www.instagram.com/reel/CWcBdj2oJK6/?utm_source=ig_web_copy_link
அன்டனாஸ் கான்டிரிமா என்ற 67 வயது பளு தூக்கும் வீரர் 63.80 கிலோ எடையுள்ள இளம்பெண்ணைத் தனது தாடியில் கட்டித் தூக்கியுள்ளார்.
லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த ஒரு கிராமத்தின் தலைவரான அன்டனாஸ் கான்டிரிமா துருக்கி நாட்டுத் தலைநகர் இஸ்தான்புல் நகரில் இத்தாலியப் பெண்ணைத் தூக்கி இந்த சாதனை புரிந்துள்ளார்.
அன்டனாஸ் தாடி வளர்க்கத் தொடங்கியதன் பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது.
தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கான பீர் விளம்ரம் ஒன்றில் நடிப்பதற்காக தாடி வளர்க்கத் தொடங்கினார். விளம்பரத்தில் நடித்துமுடித்ததும் தாடியை நன்கு வளர்க்கத் தொடங்கிவிட்டார்.
அப்போது அவரது நண்பர்கள், அன்டனாஸின் சொந்த ஊரான டெல்சியா நகரிலுள்ள ஜிம்மில் பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்களை நீங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டுப் பளு தூக்குகிறீர்கள். நானோ எனது தாடியாலே இந்த எடையைத் தூக்கிவிடுவேன் என்று கேலிசெய்தார். நண்பர்களும் அப்படியா… எங்கே தூக்கு… பார்க்கலாம் என்று சவால் விடுத்தனர். அன்டனாஸ் சவாலை ஏற்றுக்கொண்டார்.
அதையடுத்து, முதலில் முட்டைகளைத் தனது தாடியால் தூக்கினார். அதைத் தொடர்ந்து பீர் பீப்பாய் ஒன்றைத் தூக்கினார். பிறகு, தானிய சாக்கு மூட்டைகளைத் தனது தாடியில் கட்டி இழுத்தார். பின்னர், மூன்று இராணுவ வீரர்களுடன் 3 டன் எடையுள்ள ஜீப் ஒன்றை தாடியால் இழுத்து சாதனையின் அளவை உயர்த்தினார்.
மேலும், சிறிய விமானம் ஒன்றையும் இழுத்து மலைக்க வைத்தார். அந்த நிகழ்ச்சிகளையெல்லாம் அங்குள்ள தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. இதனால் நாடு முழுவதும் பிரபலமானார்.
இந்நிலையில், 2000 ஆவது ஆண்டில் உலக சாதனை நிகழ்த்துவதற்காக அன்டனாஸை கின்னஸ் கவுன்சில் அழைத்தது. அதையேற்று 55.7 கிலோ பளுவைத் தனது தாடியால் தூக்கி முதன்முதலில் உலக சாதனை நிகழ்த்தினார். அடுத்த ஆண்டே ஹாலிவுட்டில் 59 கிலோ எடையைத் தூக்கி முந்தைய சாதனையை முந்தினார்.
அவற்றையெல்லாம் முறியடிக்கும் முன்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு ஓர் இளம்பெண்ணைத் தனது தாடியால் அன்டனாஸ் பளு தூக்கியது தற்போது கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
தனது கிராமத்தின் தலைவராக உள்ள அவருக்குப் புகழும் பெருமையும் தேடித்தரும் தாடியை அன்போடு கவனித்துக்கொள்கிறார். மூலிகை ஷாம்பு பயன்படுத்தி தாடியைப் பராமரித்து வருகிறார் அன்டனாஸ்.
காற்றில் பறக்கிறது அவரது தாடி. பெயரும் புகழும்தான்.