செடியாக மாறும் நாளிதழ்

255
Advertisement

ஜப்பான் முன்னேறிய நாடு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. அதன் சமீபத்திய கண்டுபிடிப்பு மறுசுழற்சி செய்யப்பட்ட காய்கறிக் கழிவுகளால் உருவான காகிதத்தில் நாளிதழ் அச்சடிக்கப்படுவதாகும்.

பசுமை நாளிதழ் என்று அழைக்கப்படும் அந்த நாளிதழ் மிகப்பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. வியக்க வைக்கும் அந்தப் புதுமையான பற்றிக் காண்போம், வாருங்கள்…

1872ல் டோக்யோ நகரில் தொடங்கப்பட்டது தி மைனிச்சி (THE MAINICHI) என்னும் பிரபலமான தேசிய நாளிதழ். தற்போது காய்கனிக் கழிவுகளை சேர்த்துத் தயாரிக்கப்பட்ட காகிதத்தில், தாவரங்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட மை (இங்க்)யைக் கொண்டு அச்சடிக்கப்படுகிறது.

இதனை வாசித்து முடித்ததும் மண்ணில் புதைத்துவிட்டால் அது செடியாக வளர்கிறது. காய்கனிக் கழிவுகளுடன் சிறிய பூக்கள், மூலிகை விதைகள் ஆகியவையும் கலந்து இந்தக் காகிதம் தயாரிக்கப்படுகிறது.

இந்த நாளிதழை வாசித்துமுடித்தவுடன் இனி தூக்கியெறிய வேண்டாம்.
துண்டுதுண்டாகக் கிழித்து நடவுசெய்து தண்ணீர் ஊற்றினாலே போதும், அழகான செடிகளாக வளரும். 2016 ஆம் ஆண்டு, மே 4 ஆம் தேதியிலிருந்து இந்தப் பசுமை நாளிதழ் வெளிவருகிறது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு காய்கனிக் கழிவுகளிலிருந்து காகிதம் தயாரிக்கப்பட்டுள்ளது.

காகிதம் தயாரிப்பதற்காக ஒவ்வோராண்டும் ஜப்பானில் 95 மில்லியன் மரங்கள் பயன்படுத்தப்பட்டுவரும் நிலையில், காய்கனிக் கழிவுகளிலிருந்து காகிதம் தயாரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்படும் நடவடிக்கை மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

காலை நாளிதழாகவும், மாலை நாளிதழாகவும் ஆங்கில மொழியில் வெளியாகும் தி மைனிச்சி தினமும் 40 லட்சம் பிரதிகள் விற்பனையாகிறதாம். அதன்மூலம் 80 மில்லியன் யென் வருவாயைப் பெறுகிறதாம். அதாவது, கிட்டத்தட்ட 7 லட்சம் அமெரிக்க டாலருக்குச் சமமான வருவாய்.

உலகில் முதன்முதலில் வீடுகளுக்கு டெலிவரி செய்யப்பட்ட நாளிதழ் தி மைனிச்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.