கடலின் அங்கமாகவும் உலகின் நான்காவது பெரிய ஏரியாகவும் விளங்கிய
ஆரல் கடல் இப்போது இல்லையென்றால், உங்களால் நம்ப முடிகிறதா?
நம்பித்தான் ஆக வேண்டும். கண்ணும் கண்ணும் திரைப்படத்தில்
நடிகர் வடிவேல், ”ஐயா எங்கிணத்தக் காணல….வந்து கண்டுபிடிச்சுக்
குடுங்க”ன்னு போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளெய்ன்ட் கொடுத்த0
நகைச்சுவை மாதிரி இருக்கிறதா…?
இல்லை. இது வேதனைப்பட வேண்டிய விஷயம்.
யுனெட்டெட் ஸ்டேட்ஸ் ஆஃப் சோவித் ரஷ்யாவின் மாகாணமாக இருந்து
தற்போது பிரிந்து தனி நாடாகியுள்ள உஸ்பெகிஸ்தான் நாடு தான்
இந்த வேதனைக்குள்ளாகியிருக்கும் நாடு.
50 ஆண்டுகளுக்குமுன் கம்பீரமாக இருந்த கடல் இப்போது இல்லை.
‘ஆரல் கடல்’ என்றழைக்கப்பட்ட இந்தப் பகுதி தாஷ்கண்ட் நகரிலிருந்து
400 மைல் தொலைவில் இருந்தது.
அமுதர்யா, சைதர்யதா என்ற இரண்டு ஆறுகள் ஆப்கானிஸ்தான்,
தஜிகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளின் மலைப்பகுதிகளில்
தோன்றி அப்பகுதிகளை வளப்படுத்தி இறுதியாக உஸ்பெகிஸ்தான் நாட்டிலுள்ள
ஆரல் கடல் பகுதியில் கலந்தன.
உலகின் மிகப்பெரிய நான்காவது ஏரியாக இருந்தாலும் அப்பகுதி மக்கள்
ஆரல் கடல் என்றே அழைத்துவந்தனர். அந்தளவுக்கு மிகப்பெரியதாக
இருந்தது. 68 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக இந்த ஏரி இருந்தது.
இந்த ஏரியில் 1100 தீவுகள் இருந்தன. 1960களில் ஆண்டுக்கு 40 ஆயிரம் டன்
மீன்கள் பிடிக்கப்பட்டன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
இவ்வளவு பிரம்மாண்டமான ஏரி எப்படிக் காணாமல் போனது-..?
சோவியத்தின் மையப்பகுதியை வளப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்
அங்கு பருத்தி விளைச்சலை அதிகப்படுத்த திட்டம் தீட்டப்பட்டது- இரசாயன
உரங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது.
இதற்காக அமுதர்யா, சைதர்யா ஆற்றை இப்பகுதிக்குத் திருப்பிவிட்டனர்.
1960 ல் இருந்த பாசனப் பரப்பு 1980ல் இரண்டு மடங்கு அதிகரித்தது.
இந்த இரண்டு ஆறுகளின் 90 சதவிகிதத் தண்ணீர் பருத்தி விளைச்சலுக்கே
பயன்படுத்தப்பட்டது.
அதேசமயம், ஏரியின் நீர் மட்டம் குறையத் தொடங்கியது. ஏரித் தண்ணீர்
உப்புத் தண்ணீராக மாறியது. அத்தோடு நிற்கவில்லை. கழிவுகளையும்
அதில் கொட்டினர். அதன் விளைவாக மீன் இனங்கள் அழிந்துபோயின.
பறவை இனங்களும் காணாமல் போயின.
இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரின் படைகளை எதிர்ப்பதற்காக
இந்தக் கடலில் நங்கூரமிடப்பட்ட கப்பல்கள் தரைதட்டி நின்றன.
சோவியத் யூனியன் உடைந்து சிதறுண்டபோது இந்த ஆரல் கடல்
உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் நாடுகளுக்குள் வந்தது. அவ்விரு
நாடுகளும் ஆற்றின் நீரைத் திருப்பிவிட்டு வேளாண்மைக்குப்
பயன்படுத்தி வந்ததால், கடல் சுருங்கி வற்றிப்போனது.
தற்போது அதன் மணல் பரப்பு நன்றாகத் தெரிகிறது.
அதில் படிந்திருக்கும் வேதிப்படிமங்கள் சுழல்காற்றில் சிக்கி
புழுதிக் காடாக மாறிவிட்டது.
இயற்கையை அழித்ததால் எவ்வளவு இன்னல்கள் பார்த்தீர்களா..?