மின்னலில் இருந்து உயிர் தப்பிய அதிசய மனிதரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தோனேஷியா நாட்டின் வடக்கு ஜகார்த்தாவிலுள்ள சிலின்சிங் என்னும் கடலோர நகரத்தில் காவலாளியாக வேலைசெய்து வருகிறார் அப்துல் ரோசிட். 35 வயதான ரோசிட் சம்பவத்தன்று குடையைப் பிடித்துக்கொண்டு சாலையில் நடந்துசென்றுள்ளார்.
அப்போது மின்னல் குடையைத் தாக்கித் தீப்பொறிகள் பறந்துள்ளன. அது அவரது தாடையிலும் விழுந்துள்ளது. அதனால் சாலையிலேயே சரிந்து விழுந்துவிட்டார்.
உடனடியாக அங்கிருந்த சிலர் அருகே ஓடிவந்து பார்த்தனர். அசையால் சுருண்டு விழுந்து கிடந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அவரைப் பரிசோதித்தபோது கையில் மட்டுமே காயம் ஏற்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து மருத்துவர்கள் ரோசிட்டுக்கு சிகிச்சையளிக்கத் தொடங்கினர். 4 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
மின்னல் தாக்கி உயிர் பிழைத்துள்ள அதிசய மனிதராகியுள்ள அப்துல் ரோசிட் மின்னலால் தாக்கப்பட்ட காட்சியும், அதைத் தொடர்ந்து அங்குள்ளவர்கள் அவரை சிசிக்சைக்கு கொண்டுசெல்லும் காட்சியும் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.