விமானத்தை ஹோட்டலாக மாற்றிய இரும்பு வியாபாரி

367
Advertisement

வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக சேவையிலிருந்து விடுவிக்கப்பட்ட பேருந்து, ரயில் போன்றவை ஹோட்டலாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் விமானம் ஒன்று ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம், வதேரா மாவட்டத்தில் தார்சாலி புறவழிச்சாலையில், அந்த விமானம் 2021 ஆம் ஆண்டு, அக்டோபர் 25 ஆம் தேதியிலிருந்து உணவகச் சேவையைத் தொடங்கியுள்ளது. குஜராத்தின் முதல் விமான உணவகமாகவும் இந்தியாவின் நான்காவது உணவகமாகவும், உலகின் 9ஆவது உணவகமாகவும் இந்த விமானம் அமைந்துள்ளது.

ஏர்பஸ் 320 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஹோட்டலில் 102 பேர் அமர்ந்து சாப்பிடலாம். விமானத்தின் இறக்கைப் பகுதியில் 18 பேர் உட்கார்ந்து சாப்பிடலாம். கூட்டம் அதிகமாக இருக்கும் சமயத்தில் காத்திருப்பு அறையும் இந்த ஹோட்டலில் உள்ளது. இந்த ஹோட்டலில் 40பேர் பணிபுரிகின்றனர்.

இந்த விமான உணவகத்தில் பஞ்சாபி, சைனிஷ், இத்தாலியன், மெக்சிகன், தாய்லாந்து உணவுகள் உள்பட பலதரப்பட்ட நாடுகளின் உணவுகள் பரிமாறப்படுகின்றன.

இங்கு உணவு பரிமாறும் அனைவரும் விமானப் பணியாளர் போலவும், விமானப் பணிப்பெண் போலவும் உடையணிந்திருக்கிறார்கள். விமானப் பயணிகளை வரவேற்பதுபோலவே இங்கு வரும் வாடிக்கையாளர்களை அவர்கள் வரவேற்கிறார்கள்.

உணவுகளைப் பற்றிய அறிவிப்புகளை அவ்வப்போது அறிவித்துக்கொண்டே இருப்பார்கள். இதனால், விமானத்தில் பயணித்தபடியே உணவுண்ணும் உன்னதமான அனுபவத்தை வாடிக்கையாளர்கள் இங்கு பெறலாம்.

நிஜ விமானத்தில் பயணிக்கும்போது அவ்வப்போது அறிவிப்புகள் ஒலிக்கும். அதைப்போலவே, இந்த விமான ஹோட்டலிலும் என்னென்ன உணவுகள் உள்ளன என்பதைப் பற்றிய அறிவிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன.

விமானம் ஹோட்டலாக மாறியதன் பின்னணி மிகவும் சுவையானது.

சேவையிலிருந்து ஓய்வுபெற்ற அந்த விமானத்தை 2019 ஆம் ஆண்டில்ஒரு கோடியே 40 லட்ச ரூபாய்க்கு வாங்கியுள்ளார் பெங்களூருவைச் சேர்ந்த இரும்பு வியாபாரியான மெகபூப் முஹி. ஊரடங்கு நேரத்தில் தொழில்நுட்பக் கலைஞர்களின் உதவியோடு அந்த விமானத்தைப் பிரித்தெடுத்தபோது அதனை ஹோட்டலாக மாற்றும் யோசனை பிறந்திருக்கிறது.

உடனடியாக அந்த விமானத்தின் பாகங்கள் ஒவ்வொன்றாக குஜராத்துக்கு கொண்டுவரப்பட்டு ஹோட்டல் ஆக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த விமானத்தின் விலை 2 கோடி.

உலகில் 9 இடங்களில் இதுபோல் விமான ஹோட்டல்கள் இயங்கி வருகின்றன. இந்தியாவில் ஏற்கெனவே ஆக்ரா, லூதியானா, மோரி ஆகிய நகரங்களில் இதுபோல விமான உணவகங்கள் இயங்கிவருகின்றன.