மணமகள் வேட்டி கட்டியும் மணமகன் சேலை உடுத்தியும் நடந்த
விநோதத் திருமணம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் கன்ன மணி
சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இந்த சமூகத்தினர் தங்களின்
திருமணத்தின்போது இந்த வழக்கத்தைப் பின்பற்றி வருகின்றனர்.
அந்த வழக்கப்படி, திருமணத்தன்று மணமகன் பட்டு சேலை உடுத்தி,
நகை அணிந்து பெண்போலவும், மணமகள் பட்டு வேட்டி, சட்டை உடுத்தி
ஆண்போலவும் மாறிவிடுகின்றனர். தாலி கட்டுவது மட்டும்
பெண் வேடமிட்டிருக்கும் ஆண் மேற்கொள்கிறார்.
எப்படி இந்த வழக்கம் வந்ததாம்…?
இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காகதியப் பேரரசில் ராணியாக இருந்த
ராணி ருத்ரமாதேவியின் படையில் தளபதிகளாக விளங்கியவர்கள்.
அந்த சமயத்தில் ராணி ருத்ரமாதேவியைத் தோற்கடிக்க எதிரிப்படைகள்
வந்தன. அப்போது தன் நாட்டிலுள்ள பெண்களுக்கு ஆண் வேடமிட்டு
எதிரியை வீழ்த்தியுள்ளார்.
ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஆண் இருக்கிறான் என்பது ராணி
ருத்ரமாதேவியின் நம்பிக்கையாம். அதனால்தான் இப்படிச்
செய்ததாக இந்த சமூக மக்கள் நம்புகிறார்கள்.
காலங்காலமாகப் பின்பற்றி வரும் இந்த வழக்கத்தை அடுத்த
தலைமுறைக்கும் கொண்டுசெல்ல விரும்புகிறார்களாம் இந்த சமூக மக்கள்.