சிறுவர்களை வென்ற சிறுமிகள்

270
Advertisement

வடம் பிடித்து இழுத்தல் போட்டியில் சிறுவர்கள் டீமை வென்று சிறுமிகள் டீம் அசத்தியுள்ளது.

தமிழர் திருநாளான பொங்கல் அன்று கிராமம், நகரம் உள்பட தமிழகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது வழக்கம். குறிப்பாக, வடம்பிடித்து இழுத்தல் போட்டி கண்கொள்ளாக் காட்சியாக அமைந்து பொங்கல் திருநாளை சிறப்பாக்கும்.

வடம்பிடித்து இழுத்தல் போட்டியானது ஆண்களுக்கிடையேதான் நடக்கும். மிக அரிதாக, இளைஞர்களுக்கும் முதியோர்களுக்கும் இடையே நடக்கும். விநோதமாக, டிராக்டருக்கும் மனிதர்கள் அடங்கிய குழுவுக்கும் இடையே நடக்கும். அதில், மனிதர்கள் வென்ற ஆச்சரியமான நிகழ்வுகளும் நடந்ததுண்டு.

இந்த நிலையில் ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு தனது ட்டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ அனைவரையும் கவர்ந்து வருகிறது.

அந்த வீடியோ பாகிஸ்தான் நாட்டிலுள்ள பலுசிஸ்தான் பகுதியில் நடைபெற்ற வடம்பிடித்து இழுத்தல் போட்டியாகும்.

திறந்த வெளியில் நிகழ்ந்த அந்தப் போட்டியில் ஒருபக்கம் 4 சிறுவர்கள் ஒரு குழுவாகவும், எதிர்ப்பக்கம் 4 சிறுமிகள் மற்றொரு குழுவாகவும் நின்று வடத்தை இழுக்கின்றனர். போட்டியின் முடிவில் சிறுமிகள் குழு வெற்றிபெற்றது. வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் சிறுமிகள் துள்ளிக் குதித்து மகிழ்கின்றனர். சிறுவர்களோ சோகமாகிவிட்டனர்.

பெண்கள் மனவலிமை மிக்கவர்கள் மட்டுமன்றி, உடல் வலிமையும் மிக்கவர்கள் என்பது இதுபோன்ற போட்டிகளால் பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றிக் கருத்துத் தெரிவித்துள்ள சுப்ரியா சாகு, எப்போதெல்லாம் சம வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் பெண்கள் வெற்றிபெறுகின்றனர் என்று கூறியுள்ளார். அவரது கருத்துப் பெண்களுக்கு ஊக்கம் அளிப்பதாகவும், தன்னம்பிக்கை தருவதாகவும் அமைந்துள்ளது.