முதல்வர் விஜய் அரசுக்கு முதல் ‘Test ‘! மின்கட்டண உயர்வை தடுப்பாரா ?

தமிழக மக்களுக்கு ஒரு மிக முக்கியமான செய்தி. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் மின்கட்டணத்தை மாற்றியமைக்கும் நடைமுறையின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு மின்கட்டண உயர்வு தொடர்பான ஆலோசனைகளையும் கருத்துகளையும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தற்போது கோரியுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் 2027-ஆம் ஆண்டு வரை ஆண்டுதோறும் மின்கட்டணத்தை உயர்த்திக் கொள்ள ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டும் மின்கட்டணம் உயர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாகப் பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க இன்று முதல் 15 நாட்கள் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களின் ஆலோசனைகளை www.tnerc.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாகப் பதிவு செய்யலாம். தமிழ்நாட்டில் 2022-ஆம் ஆண்டுக்கு முன்பு சுமார் 8 ஆண்டுகளாக மின்கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்தது. ஆனால், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் மின்வாரியத்தின் நிதிச் சுமையைக் கருத்தில் கொண்டு, 2022 முதல் ஒவ்வொரு ஆண்டும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.

தற்போதைய சூழலில் மின்வாரியம் இன்னும் அதிகப்படியான கடனில் சிக்கித் தவிப்பதாலும், தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதாலும், இந்த ஆண்டும் கட்டண உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. மின்கட்டணத்தை எவ்வளவு உயர்த்தலாம் என்பதற்குச் சில முக்கியமான விதிமுறைகள் உள்ளன. மின்கட்டண உயர்வு என்பது அதிகபட்சமாக 6 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது அல்லது ஏப்ரல் மாத நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் இருக்க வேண்டும். இதில் எது குறைவாக இருக்கிறதோ, அதன் அடிப்படையில் தான் கட்டணம் உயர்த்தப்படும்.

கடந்த ஆண்டு நுகர்வோர் குறியீட்டு எண் 3.16 சதவீதமாக இருந்ததால், அந்த அளவிற்கு மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால், வீடுகளுக்கான மின்கட்டண உயர்வை அப்போதைய அரசே ஏற்றுக் கொண்டதால், பொதுமக்கள் நேரடியாகப் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த ஆண்டு வரவிருக்கும் மின்கட்டண உயர்வை அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. கஜானா காலி என்று கூறி வரும் நிலையில், மின்கட்டண உயர்வை அரசே ஏற்குமா அல்லது சுமை மக்கள் மீது விழுமா என்பது ஜூன் மாதம் தெரியவரும். அதற்கு முன்பாக, பொதுமக்கள் தங்களின் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டியது அவசியம். இந்த 15 நாட்களில் வரக்கூடிய கருத்துகளின் அடிப்படையிலேயே இறுதி முடிவை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எடுக்கும். மின்கட்டண உயர்வு தொடர்பான இந்த அதிரடி நகர்வு தமிழக அரசியலில் எந்த மாதிரியான விவாதங்களைக் கிளப்பப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News