“தொகுதி மறுவரையறை மசோதா திமுகவிற்கு கிடைத்த வெற்றி”… கூட்டத்தில் ஸ்டாலின் பேசியது என்ன?

தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக உணர்ச்சிவசப்படாமல், தொலைநோக்குப் பார்வையுடன் திமுக செயல்பட்டு வருவதாக அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் அவரது தலைமையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடும் என முதன்முதலில் எச்சரித்தது திமுகதான் என்றார். மேலும், இதுதொடர்பாக தேசிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், பல்வேறு கட்சித் தலைவர்களையும் ஒன்றிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாகக் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் திமுக முன்வைத்த இரண்டு முக்கிய கோரிக்கைகளும் தற்போது திருத்தப்பட்ட மசோதாவில் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். 1971ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்பதும், தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ விகிதம் பாதிக்கப்படக்கூடாது என்பதும் திமுகவின் முக்கிய கோரிக்கைகளாகும்.

மேலும், அடுத்த 25 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதில் திமுக தொடர்ந்து உறுதியாக இருக்கும் என்றும், மாநிலத்தின் நலனில் எவ்வித சமரசமும் கிடையாது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கட்சியின் நிலைப்பாட்டை உறுப்பினர்கள் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Related News

Latest News