குப்பையில் கிடந்த தங்க நாணயத்தை ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

372
Advertisement

தரம்பிரிக்கும்போது குப்பையில் கண்டெடுத்த 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நாணயத்தைப் போலீசார் மூலம் உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் மேரிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சென்னை, திருவொற்றியூர் அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர்கள் கணேஷ் ராமன்- ஷோபனா தம்பதி. கணேஷ்ராமன் 100 கிராம் எடையுள்ள தங்க நாணயத்தை வாங்கி, மனைவி பயன்படுத்திய பழைய வளையல் கவரில் போட்டு, கட்டிலுக்கு அடியில் வைத்திருந்திருக்கிறார்.

அதனையறியாத ஷோபனா வீட்டை சுத்தம்செய்தபோது அந்தக் கவரை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார்.

பணிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய அவரது கணவர் கணேஷ்ராமன் கட்டிலுக்கு அடியில் வைத்திருந்த கவரைப் பற்றிக் கேட்டுள்ளார். ஷோபனாவோ அந்தக் கவரைக் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டதாகக் கூறியுள்ளார்.

அதனால் அதிர்ச்சியடைந்த கணேஷ்ராமன் உடனே சாத்தாங்காடு காவல்நிலையத்தில் புகார்செய்துள்ளார்.

காவல்துறையினரோ துப்புரவுப் பணி மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தின் மேற்பார்வையாளரிடம் தெரிவித்துள்ளனர். அவர் குப்பைகளைத் தரம்பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளியான மேரியிடம் கூறினார்.

மேரி குப்பைகளைத் தேடி அதில் கிடந்த தங்க நாணயத்தைக் கண்டெடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். எடை சரிபார்க்கப்பட்ட பிறகு, அந்தத் தங்க நாணயம் கணேஷ்ராமன் ஷோபனா தம்பதியிடம் மேரியைக்கொண்டே ஒப்படைக்கச் செய்தனர் காவல்துறையினர்.

இதனையறிந்த தமிழகத் தலைமைச் செயலர் வெ. இறையுன்பு, ”நீங்கள் தூய்மைப் பணியாளர் அல்ல, தூய்மையான பணியாளர்” என்றுகூறி மேரியை வாழ்த்தியுள்ளார். மேரியின் நேர்மையான செயலைப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.