நடிகர் விஜயின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2015-ஆம் ஆண்டு வருமான வரித்துறை திடீர் சோதனை நடத்தியது. அந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கிடையில், 2015–2016 நிதியாண்டுக்கான தனது வருமானமாக ரூ.35 கோடி 42 லட்சம் 91 ஆயிரத்து 890 ரூபாய் என விஜய் வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டியிருந்தார்.
அப்போது, ‘புலி’ திரைப்படத்தில் நடித்ததற்காக அவர் பெற்ற ரூ.15 கோடியை வருமான கணக்கில் சேர்க்கவில்லை என்பது கண்டறியப்பட்டது. இதனை வருமானத்தை மறைத்த செயலாக கருதி, விஜய்க்கு ரூ.1 கோடியே 50 லட்சம் அபராதம் விதித்து, 2022-ஆம் ஆண்டு ஜூன் 30-ந் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.
இந்த அபராத உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வருமான வரித்துறை விதித்த அபராதத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் இறுதி தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதம் செல்லுபடியாகும் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
