Friday, July 4, 2025

‘அங்க’ என்னத்த பாத்துட்டு இருக்க? ஆகாஷ் தீப்பை ‘திட்டித்தீர்த்த’ கேப்டன்

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி, பெர்மிங்காமின் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கேப்டன் சுப்மன் கில்லின் இரட்டை சதம், ஜடேஜாவின் 89 ரன்கள் மற்றும் ஜெய்ஸ்வாலின் 87 ரன்கள் ஆகியவற்றால், இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்களை குவித்தது.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஆரம்பத்திலேயே 3 விக்கெட்களை இழந்து தடுமாற தொடங்கியது. இதற்கு ஆகாஷ் தீப்பின் அசத்தல் பந்துவீச்சே முக்கிய காரணமாகும். அவரின் வேகத்தில் பென் டக்கெட், போப் இருவரும் டக் அவுட்டாகி வெளியேறினர். மற்றொரு வீரரான சாக் கிராலி 19 ரன்னில் இருந்தபோது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதனால் இந்த 2வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு சற்று பிரகாசமாக இருக்கிறது. இந்தநிலையில் இந்திய அணியின் பேட்டிங்கின்போது கேப்டன் கில், ஆகாஷ் தீப்பை திட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கில் 260 ரன்னில் இருந்தபோது சிங்கிள் எடுக்க ஓடினார். அப்போது எதிர்முனை பேட்டராக இருந்த ஆகாஷ் தீப் ரன் எடுக்க ஆயத்தமாக இல்லை.

இதனால் திடீரென கில் ஓடிவருவதை பார்த்து ஷாக் ஆகி, மறுமுனைக்கு ஓடினார். அதற்குள் பந்தை பிடித்த ஒல்லி போப் விக்கெட் கீப்பரிடம் பந்தினை தூக்கி வீசினார். பந்து கீப்பர் கைக்கு வருவதற்குள், ஆகாஷ் டைவ் அடித்து கிரீஸுக்குள் சென்று விட்டார். போப் மட்டும் சரியாக ஸ்டெம்பை பார்த்து பந்தை எறிந்திருந்தால், நிச்சயம் ஆகாஷ் தனது விக்கெட்டை பறிகொடுத்திருப்பார்.

இதைப்பார்த்த கில், ”அங்க என்ன பாத்துட்டு இருக்க? சீக்கிரம் ஓடு” என்று கோபத்தில் முகம் சிவந்து கத்தினார். இது ஸ்டெம்ப் மைக்கிலும் தெளிவாக கேட்டது. இந்த விஷயத்தில் ஆகாஷ் தீப்பின் மீதுதான் தவறு என்பதால்,  கில்லின் மீது விமர்சனங்கள் எதுவும் எழவில்லை. இந்திய டெஸ்ட் கேப்டன் ஆனபிறகு களத்தில் முதன்முறையாக சகவீரர் மீது, கேப்டன் கில் கோபத்தை காண்பித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news